ஆளத்தி - வ. ஆலப்தி. ஆல் - ஆள் - ஆழி = 1. வட்டம் (பிங்.). 2. மோதிரம். “ஆழிவாய் விரலில்” (சீவக. 833). 3. கணவனைப் பிரிந்த மனைவி இழைக்குங் கூடற் சுழி. “ஆழியாற் காணாமோ யாம்” (ஐந். ஐம். 43). 4. சக்கரம் (பிங்.). 5. குயவன் சக்கரம். “மட்கலத் தாழி யென்ன” (கம்பரா. வாலிவ. 37). 6. சக்கரப் படைக்கலம். “ஆழியெழச் சங்கும் வில்லுமெழ” (திவ். திருவாய். 7 4 1). 7. கட்டளைச் சக்கரம். “ஆழி வேந்தன்” (கம்பரா. தைல. 70). 8. கட்டளை. “ஆழி நிற்குதி யல்லையேற் பழிவரும்” (உபதேசகா. சிவவிரத. 16). ஆழிமால்வரை = சக்கரவாளமலை. “ஆழி மால்வரைக் கப்புறம் புகினும்” (புறத். ஆசிரியமாலை). ஆல் - ஆர் - ஆரம் = 1. பறவைக் கழுத்து வட்ட வரி. 2. பதக்கம் (திவா.). ஆள் - ஆடு. ஆடுதல் = 1. அசைதல். “ஆடுகழை” (கலித். 41). 2. உலாவுதல். “இளமழை யாடும்” (கலித். 41). 3. சுற்றுதல். பம்பரம் ஆடுகிறது. 4. சுற்றிவருதல். செக்காடுகிறது. 5. நடஞ்செய்தல். “அம்பலத் தாடுவான்” (பெரியபு. கடவுள்). 6. கூத்தாடுதல் (பிங்.). 7. நாடகம் நடித்தல். 8. விளையாடுதல். “அகன்மலை யாடி” (மணிமே. 10 55). 9. அலைதல். “ஆடித் திரிந்துநான் கற்றதுங் கேட்டதும்” (தாயு. சச்சிதா. 5). 10. சண்டையில் திரிதல். “வருந்தி - ஆடினாள் பாடினாள்” (ஒளவை. தனிப்பாடல்). 11. அளவிற்கு மிஞ்சி அதிகாரஞ் செலுத்துதல். 12. ஒரு துணைவினை. எ - டு : நீராடு, போராடு, சொல்லாடு, மல்லாடு, சேறாடு, நீறாடு. ம., தெ., க., து. ஆடு. ஆடு - ஆடகன் = ஆடுவோன் (நடிகன், விளையாடி). ஆடு - ஆட்டு = 1. கூத்து. “பாட்டு மாட்டும் விரைஇ” (மதுரைக். 616). 2. விளையாட்டு. “அன்னவகை யாட்டயர்ந்து” (பரிபா. 10 97). 3. அசைப்பு. ஓர் ஆட்டு ஆட்டினான். 4. ஆடுவிப்பு. ம. ஆட்டு. ஆட்டு - ஆட்டம் = 1. அசைவு. 2. உலாவல். “அஞ்சன மேனியை யாட்டங் காணேன்” (திவ். திருவாய். 10 3 3). 3. கூத்தாட்டு. 4. விளையாட்டு. 5. நாடக நடிப்பு. 6. ஒருமுறை நாடகமாடுகை அல்லது விளையாடுகை. ஒரு நாளைக்கு எத்தனை ஆட்டம்? 7. அளவிற்குமிஞ்சி அதிகாரஞ் செலுத்தம். ஆடாத ஆட்டம் ஆடினான். 8. அலைக்கழிப்பு. என்னை ஆட்டங்காட்டுகிறான். 9. முரண்டு. ஊருக்குப் போக வேண்டுமென்று ஒரே ஆட்டம் ஆடினான். |