பக்கம் எண் :

67

‘கபிலை’ என்பது குரால் (புகர்நிற ஆன்). ஆவைக் கட்டி நீரிறைக்கும் வழக்கம் தமிழகத்தில் இல்லை. கவலை என்னும் தென்சொல்லை வடசொல்லாக்கவே, கபிலை என்னும் வட சொல்லை ஆண்டுள்ளனர் தமிழ்ப் பகைவர். கம் என்பதும் தென்சொல்லே. அம் = நீர். அம் - கம்.

இனி, கருமம் என்பதன் குறுக்கமான கம் என்னுஞ் சொல், முதல் தொழிலான பயிர்த்தொழிலைக் குறித்தது எனினுமாம்.

ஆல் - ஆலத்தி = வழிபாட்டிலும் கண்ணெச்சில் கழித்தலிலும், விளக்கு முத்து சோறு முதலியவற்றைச் சுற்றியெடுத்தல். “கூத்தும் ஆலத்தியுங் கண்டு” (சீவக. 2468, உரை).

ஆலத்தி யெடுத்தல், ஆலத்தி சுற்றுதல், ஆலத்தி வழித்தல் என்பன உலக வழக்கு.

“மரமதைக் கண்டுமாதர் மரமொடு மரமெடுத்தார்” (தனிப்பா. 2 ஆம் பாகம்). மரமொடு மரம் = ஆலத்தி.

“வெறும்புறத்திலே ஆலத்தி வழிக்க வேண்டுங் கையிலே” (ஈடு, 1 8 9).

முத்தைத் தட்டில் வைத்துச் சுற்றுதல் முத்தாலத்தி. “முத்தா லத்திகொண் டெண்ணாயிர மடவார் சூழ” (தமிழ்நா. 240).

சோற்றுருண்டையைத் சோற்றாலத்தி (அன்னாலத்தி).

ஆலத்தி -வ. ஆரத்தி.

ஆலத்தி - ஆலாத்தி.

“ஆலாத்தி சுழற்ற லென்கோ”      (சௌந்தரி. 103)

ஆலத்தி - ஆளத்தி = மெலிவு, சமன், வலிவு என்னும் முந்நிலைகளிலும் இசை வட்டமிட்டுப் பாடுதல்.

“மகரத்தி னொற்றாற் சுருதி விரவும்
பகருங் குறினெடில்பா ரித்து _ நிகரிலாத்
தென்னா தெனாவென்று பாடுவரே லாளத்தி
மன்னாவிச் சொல்லின் வகை.”

“குன்றாக் குறிலைந்துங் கோடா நெடிலைந்து
நின்றார்ந்த மந்நகரந் தவ்வொடு _ நன்றாக
நீளத்தா லேழு நிதானத்தா னின்றியங்க
ஆளத்தி யாமென் றறி”

என்பன அடியார்க்குநல்லா ருரை மேற்கோள் (சிலப். 3:26).