பக்கம் எண் :

வேர்ச்சொற் கட்டுரைகள்

(செ. குன்றா வி.) இளைப்பாற்றுதல். “எம்மைச் சுமந் தயாவுயிர்த்த வாண்மை” (சீவக. 2947).

அயா - அயாவு. அயாவுதல் = வருந்துதல். “மானயா நோக்கியர்” (சீவக. 1822).

அயை - ஆய். ஆய்தல் = 1. அசைதல். “ஆய்மறியே” (திருக்கோ. 125, உரை). 2. சோர்தல். 3. வருந்துதல். “ஐய விடைமடவா யாய” (திணைமாலை. 17). 3. கொண்டாடுதல். “ஆயு மடுதிறலாற்கு” (பு. வெ. 4 16).

ஆய் = வருத்தம். (அக. நி.).

ம., க, து. ஆய்.

அல் - ஆல். ஆலுதல் = 1. சுற்றுதல். 2. சுற்றியாடுதல். “கரைநின் றாலு மொருமயில் தனக்கு” (மணி. 4 11). 3. களித்தல். (திவ். திருமாலை. 14, வியாக்.) 4. தங்குதல். (கலித். 36 2, உரை). க. ஆல்.

ஆல் - ஆலை = 1. சுற்றியாடும் கரும்பாலை. “ஆலை நீள் கரும் பன்னவன் றாலோ” (திவ். பெருமாள். 7 1). 2. கரும்பு. “ஆலை யஞ்சிலை வேள்” (கந்தபு. காமதக. 90).

ஆலைபாய்தல் = 1. ஆலை யாட்டுதல். “ஆலைபா யோதை” (சேதுபு. நாட்டு. 93). 2. அலைவுறுதல். 3. மனஞ் சுழலுதல். “நெஞ்ச மாலைபாய்ந் துள்ள மழிகின்றேன்” (அருட்பா, விண்ணப்பக்கலி, 406).

ஆலைமாலை = தொந்தரவு.

ஆல் - ஆலா = வட்டமிட்டுப் பறக்கும் பறவை வகை.

கம் (நீர்) + ஆலை = கம்மாலை - கமலை = கிணற்று நீரிறைக்கும் காளை யேற்றம். முதற் காலத்தில் கமலை சுற்றிவரும் அமைப்பாயிருந்தது. இக்காலத்தும் தொண்டைநாட்டின் தென் பாகத்தில் சுற்றுக் கவலை ஆடுதல் காண்க.

காளையேற்றத்தைக் கமலை யென்பது பாண்டி நாட்டு வழக்கு; கவலையென்பது சோழ கொங்குநாட்டு வழக்கு.

தெ. கபிலெ,க. கபிலெ, கபலி,ம. கப்பி,து. கபி.

கன்னடத்திலும் தெலுங்கிலும் வகரம் பகரமாகத் திரிவதால், அதைத் துணைக்கொண்டு கவலையைக் கபிலை என்று திரித்து, அதை வடசொல்லாகக் காட்டியுள்ளது சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் அகர முதலி.