சேது + ஆ = சேதா = செந்நிற ஆன். “சிலம்பின் மேய்ந்த சிறுகோட்டுச் சேதா’’ (நற். 359). சேது + ஆம்பல் = சேதாம்பல் = செவ்வாம்பல். ‘சேதாம்பற் போதனைய செங்கனிவாய்’’ (கம்பரா. நகர் நீங். 101). சேய் - சே. சேத்தல் = சிவப்பாதல். “அவன் வேலிற் சேந்து’’ (கலித். 57). 2. சினத்தல். “நித்தில மேந்திச் சேந்தபோல்’’ (சீவக. 329). சே = 1. சிவப்பு. “சேக்கொள் கண்ணை’’ (கல்லா. 85: 9). 2. சேங்கொட்டை (மலை.). சே - சேப்பு = 1. சிவப்பு. “ஊடலிற் செங்கண் சேப்பூர’’ (பரிபா. 7 10). 2. சிவப்புக்கல். சேத்து - சேந்து = 1. சிவப்பு (பிங்.) 2. தீ. (யாழ். அக.). “சேந்தினடைந்த வெலாஞ் சீரணிக்க’’ (அருட்பா, 1. நெஞ்சறிவுறுத்தல், 689). 3. அசோகு (மலை.). சேந்து - சேந்தன் = முருகன். “சூர்தடிந் திட்ட சேந்தன்’’ (தேவா. 942 :6). சேந்தன் - சேந்து. ஒ.நோ : வேந்தன் - வேந்து. சேந்து + இல் = சேந்தில் - செந்தில். சேந்து + ஊர் = சேந்தூர் - செந்தூர் (திருச்செந்தூர்). சே - சேவு = செவ்வயிரம், வயிரம். “செய்தகை சேவேறும், செய்யாத கை நோவேறும்’’ (பழமொழி). சேவு - சேகு. சேகுவயிரம் = செவ்வயிரம். சேகு - சேகை = சிவப்பு. “அண்டத் துயிர்களெலாம் வந்திறைஞ்சச் சேகையாய் மல்குந் திருத்தாள்’’ (கந்தபு. இரணியன்பு, 14). குறிப்பு: சிவம் என்னும் சொல்லிற்கு, நன்மை என்று சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் அகரமுதலி ஒரு பொருள் கூறியிருப்பது. வடநூல் வழக்கைத் தழுவியதாகும். சிவன் தென்னவர் தெய்வமாதலால், அப் பொருள் பொருந்தாது. நல்ல அல்லது மங்கல என்னும் பொருளில், உருத்திரனுக்கும் இந்திரனுக்கும் அக்கினிக்கும் பொதுவாக வழங்கிய, ‘சிவ’ என்னும் அடைமொழியாகிய வடசொல் வேறு; நெருப்பின் கூறாகக் கொள்ளப்பட்டு அழல் வண்ணன் எனப்பட்ட இறைவன் பெயராகிய சிவன் என்னும் தென்சொல் வேறு. |