பக்கம் எண் :

99

செக்கச் சிவத்தல் = மிகச் சிவத்தல். “விழியிணை செக்கச்சிவந்து’’ (திருப்பு. 126).

செக்கம் - செக்கல் = 1. செவ்வந்தி. 2. அந்திமாலை.

செக்கல் - செக்கர் = 1. சிவப்பு. “சுடுதீ விளக்கஞ் செல்சுடர்ஞாயிற்றுச் செக்கரிற் றோன்ற’’ (புறம். 16). 2. செவ்வானம். “செக்கர்கொள் பொழுதினான்’’ (கலித். 126).

செகு - செகில் = சிவப்பு. “செகிலேற்றின் சுடருக் குளைந்து’’ (திருவிருத். 69).

செகில் - செகிள் = மீனின் சிவந்த மூச்சுறுப்பு (gills).

செகிள் - செகிடு = அலகடி, கன்னம். செகிட்டைக் கட்டி யறைந்தான். (உ. வ.).

செகிள் - செவிள் - செவிடு = செவியொட்டிய கன்னம்.

செய் - சேய் = 1. சிவப்பு. “சேயுற்ற கார்நீர் வரவு’’ (பரிபா. 11:114). 2. செவ்வாய் (பிங்.). 3. செந்நிற முருகன்.

“பவழத் தன்ன மேனித் திகழொளிக்
குன்றி யேய்க்கு முடுக்கை.....
........................
சேவலங் கொடியோன்’’         (குறுந். கட. வாழ்.)

என்றது காண்க.

4. முருகனை யொத்த மறவன். “பாரதப்போர் செற்றானுங் கண்டாயிச்சேய்’’ (நள. 137).

சேய் - சேயன் = செந்நிறத்தான். “வண்ணமு மாய னவனிவன் சேயன்’’ (தொல். உவ. 32, உரை).

சேயன் - சேயான் = செந்நிறத்தான்.

சேயவன் = 1. செவ்வாய் (திவா.). 2. செந்நிற முருகன். “ஆறுமாமுகச் சேயவன்’’ (கந்தபு. தெய்வயா. 58).

சேயோன் = 1. முருகன். “சேயோன் மேய மைவரை யுலகமும்’’ (தொல். அகத். 5). 2. சிவன்.

சேயது - சேய்து - சேது = 1. சிவப்பு (சூடா.). 2. சிவந்தது. சேது -கேது = சிவந்த சாயைக்கோள், the descending node (திவா.).

ஒ.நோ : செம்பு - கெம்பு (க.). சீர்த்தி - கீர்த்தி (வ.).

சேது - சேத்து = சிவப்பு (திவா.). “சேத்தகில் புழுகு சந்தம்’’ (பாரத. பதினான். 219).