பக்கம் எண் :

வேர்ச்சொற் கட்டுரைகள்

செவல் = 1. செம்மண் நிலம்.

செவேர் எனல் = செந்நிறமாயிருத்தல்.

செவ் - சிவ். சிவ்வெனல் = சிவந்திருத்தல்.

சிவ் - சிவ. சிவத்தல் = 1. செந்நிறமாதல். “காமர் நெடுங்கண் கைம்மீச் சிவப்ப’’ (பெருங். இலாவாண. 14 :63). 2. சினத்தல். “சிவந்தனை காண்பாய்நீ தீதின்மை’’ (கலித். 91).

சிவத்தை = 1. சிவப்பு. 2. பொன்னிறப் பெண். 3. செந்நிறக் காளை.

சிவப்பு = 1. செந்நிறம். 2. சிவப்புக்கல். 3. சினம். “கறுப்புஞ் சிவப்பும் வெகுளிப் பொருள’’ (தொல். உரி. 74).

ம. சுவப்பு.

சிவப்பன் = பொன்னிறத்தான். “பேர்கறுப்பன் நிறஞ் சிவப்பன்’’ (தனிப்பாடல்). சிவப்பு - சிகப்பு.

சிவப்பி = 1. பொன்னிறத்தாள். 2. செந்தெங்கு.

சிவ - சிவம் = 1. செம்பொருள் (சிவன்). 2. சிவன் தன்மை. “சித்தமல மறுவித்துச் சிவமாக்கி’’ (திருவாச. 51 :1). 3. வீடு, பேரின்பம்.

சிவம் - சிவன் = சிவநெறியாராற் செந்நிறத்தான் எனக் கருதப்படும் இறைவன் அல்லது கடவுள்.

சிவன் - சிவை = சிவன் தேவியாக உருவகிக்கப்பட்ட திருவருள்.

சிவ - சிவல் = செம்மண் நிலம். 2. பெரும்பாலும் சிவற்காடான முல்லை நிலத்துக் கதுவாலி என்னும் பறவை.

சிவல் - சிவலை = செந்நிறக்காளை. “நெற்றிச் சிவலை’’ (கலித். 104).

சிவீர் எனல் = சிவந்திருத்தல்.

சிவீர் - சிவேர். சிவேர் எனல் = சிவந்திருத்தல்.

செவ் - செவு - செகு - செக்கு - செக்கம்.

செக்கம் = 1. சிவப்பு. 2. சினம். “செக்கஞ் செகவென் றவள்பா லுயிர்செக வுண்ட பெருமான்’’ (திவ். திருவாய். 1: 9: 5).

செக்கச் செவேர் எனல் = மிகச் சிவந்திருத்தல்.