பக்கம் எண் :

வேர்ச்சொற் கட்டுரைகள்

சுழலை = வஞ்சம். “சுழலை பெரிதுடைத் துச்சோதனனை’’ (திவ். பெரியாழ். 1:8:5).

சுழல் = 1. சுழள். “சுழலிடு கூந்தலும்’’ (கம்பரா. மிதிலை. 43). 2. பீலிக்குடை (பிங்.). 3. காற்றாடி (சூடா.). 4. சுழற்சி. “சுழற்கண் வேதாள மானான்’’ (சேதுபு. வேதாள. 72). 5. வளைவு. சுழல்படை = வளைதடி (சூடா.). 6. சுழிநீர். 7. சுழல்காற்று. 8. அலசடி (சஞ்சலம்). “சுழலார் துயர்’’ (தேவா. 294:19). 9. ஏமாற்று, வஞ்சகம். ம. சுழல்.

சுழன்மரம் = மரத்திரிகை. “சுழன்மரஞ் சொரித்த’’ (அகம். 393). சுழல் - சுழற்று - சுழற்றி = 1. இறாட்டைக்கைப் பிடி. 2. துளையிடு கருவி, துறப்பணம். சுழற்றல் = கிறுகிறுப்பு.

. காற்று.

சுளி - சுழி. சுழிதல் = 1. வளைதல், சுருளுதல். “சுழியுங் குஞ்சிமிசை’’ (கம்பரா. எழுச்சி. 34). 2. சினத்தாலும் வெறுப்பாலும் முகந்திரிதல். “தழலுமிழ்ந்தும் மதம்பொழிந்தும் முகஞ்சுழிய’’ (தேவா. 1148 7). 3. வட்டமாதல். 4. நீர்ச்சுழிபோற் சுற்றுதல். 5. மனங் கலங்குதல். “வரிவிழி கொண்டு சுழிய வெறிந்து’’ (பட்டினத். பா. உடற். 3). 6. இறத்தல் (இடத்து வழக்கு). க. சுளி.

சுழி = 1. சுன்னம். 2. எழுத்துச் சுழி. எ-டு: . அ, ள, ன, ண. 3. மயிர்ச்சுழி. 4. ஆகூழையோ போகூழையோ குறிக்கும் உடம்புச்சுழி. “சுழிகொள் வாம்பரி’’ (கம்பரா. எழுச். 32). 5. சுழிமதி. “சுழியுடைத் தாயுடைக் கொடிய சூழ்ச்சியால்’’ (கம்பரா. பள்ளி. 74). 6. கடல். “கொண்ட சுழியுங் குலவரை யுச்சியும்’’ (திருமந். 2966). 7. நீர்ச்சுழி. “கங்கையின் சுழியிற்பட்ட’’ (சீவக. 1096). 8. சுழிக்காற்று. 9. சுழற்சி. 10. சுருள். ம. சுழி. க. சுளி, தெ. சுடி.

சுழியன் = 1. குறும்பன். 2. சுழல்காற்று. “சித்திரைச் சுழியின்’’ (உ. வ.).

சுழியம் = 1. ஒருவகை இனிப்புருண்டைப் பலகாரம். 2. மகளிர் தலையணி வகைகளுள் ஒன்று “சுழியஞ் சூடி’’ (கம்பரா. கடிமணப். 52). சுழியம் - சுசியம் = ஒருவகை இனிப்புருண்டைப் பலகாரம் (நெல்லை வழக்கு).

சுழியம் - சுழியன் - சுகியன் = ஒருவகை இனிப்புருண்டைப் பலகாரம். “அவல்பொரி சுகியன்’’ (திருப்பு. 926). சுள் - சூள் - சூளிகை = நீர்க்கரை. “நன்னீர்ச் சூளிகை தோறும்’’ (அரிச். பு. விவாக. 46).