பக்கம் எண் :

வேர்ச்சொற் கட்டுரைகள்

சுல் - சொல் - சொலி. சொலித்தல் = 1. தோண்டுதல். 2. பிளத்தல். 3. உரித்தல். “காம்பு சொலித்தன்ன அறுவை’ (சிறுபாண். 236). 4. பெயர்த்தல். “திங்க ளுகிரிற் சொலிப்பது போல்’’ (சீவக. 350).

சொல்லுதல் = தீர்த்தல். “துணைவனுக் குற்ற துன்பஞ் சொல்லிய தொடங்கி னாளே’’ (சீவக. 1146).

சொலி = உரி, தொலி, பட்டை. “கழைபடு சொலியி னிழையணி வாரா’’ (புறம். 383).

சொல் - சொள் - சொள்ளை = 1. துளை. ‘ஒற்றைக் கடுக்கன் சொள்ளை’ (உ. வ.) 2. உள்ளீடற்ற சொத்தை. 3. பள்ளமான அம்மைத் தழும்பு. ‘அம்மைச் சொள்ளை’ (உ. வ.). 4. குற்றம்.

சொள் - சொள்ளல் = குற்றம்.

சொள் - சொண்டு = சொத்தை மிளகாய்.

சொண்டு - சொட்டு = குற்றம். சொட்டு - சொட்டை = சொத்தை, குற்றம். சொட்டை - சொத்தை = 1. உள்ளீடற்றுக் கறுத்த பழம். 2. புழுத்த காய். 3. பூச்சியரித்தபல்.

சொத்தை - சூத்தை (கொச்சை வழக்கு).

சொள் - சொளு. சொளுசொளுத்தல் = எளிதாய்த் துளைக்கு மாறு கூழ்போற்குழைதல், சேறாதல். ஒ.நோ : நொள் - நொளு. நொளுநொளுத்தல்.

சொளுசொளுவெனல் = நெய் தேன் முதலியன வடிதல், சொள் (சொள்ளு) = சாளைவாயினின்று வடியும் நீர்.

சொளுசொளு - சொலுசொலு. சொலுசொலெனல் = சோறு குழைதல்.

சொளுசொளு - சொதுசொது. சொதுசொது வெனல் = சேறுபோற் குழைந்திருத்தல்.

சொது - சுது - சுதை = சேறுபோன்ற சுண்ணாம்பு அல்லது சிப்பிச் சாந்து. சுதை - வ. (sudha).

“ஒளியார்முன் ஒள்ளிய ராதல் வெளியார்முன்
வான்சுதை வண்ணங் கொளல்’’         (குறள். 714).

என்று திருவள்ளுவரும்,

“வெள்ளி வெண்சுதை யிழுகிய மாடத்து’’     (மணிமே. 6: 43)

என்று சீத்தலைச் சாத்தனாரும் கூறுவதால், சுதையென்பது தென் சொல்லே.