சுது - சது - சதுப்பு = சேற்றுநிலம். சொள் - (சோள்) - சோளி = இரப்போன் பெரும்பை. து. ஜோலி, இ. ஜோலீ. சோளி - சோளிகை = இரப்போன் பெரும்பை. “ஒருவன் மாளிகைக்காரனாக இருக்கவேண்டும்; ஒருவன் சோளிகைக்காரனாக இருக்கவேண்டும்’’ (பழமொழி). க. ஜோலிகெ, து. ஜோலிகெ, தெ. த்ஜோலிய. ஒ.நோ : பொள் - பொய் - (பய்) - பை = துளை, துளையுள்ளது, துளைபோலத்தையல் கொண்டது. சொள் - (சொர்) - சொருகு. சொருகுதல் = துளைக்குள் இடுதல், உள்ளிடுதல். சொருகு - செருகு. சொள் - (சொர்) - சொரி. சொரிதல் = உள்ளிருந்து விழுதல், சிந்துதல். சொள் - சோள் - சோர். சோர்தல் = 1. குழைதல். 2. தளர்தல். “கடியு மிடந்தேற்றாள் சோர்ந்தனள் கை’’ (கலித். 92 :50). 3. மனந்தளர்தல். 4. மயக்கமடைதல். “அரசன் சோர்ந்தான்’’ (கம்பரா. அயோத். தைல. 59). 4. துயர்தல். 5. வாடுதல். “எரியிதழ் சோர்ந்துக’’ (கலித். 78). 6. மெலிதல். “காம்பேர் தோளி கண்டுசோர்ந்தன்று’’ (பு. வெ. 11, பெண்பாற். 1, கொளு). 7. தள்ளாடுதல். “கோலூன்றிச் சோர்ந்த நடையினராய்’’ (நாலடி. 13). 8. வடிதல். “அயறு சோருமிருஞ் சென்னிய’’ (புறம். 22 7). 9. கழிதல். “மலஞ்சோருமொன்பது வாயில்’’ (திருவாச. 1 54). 10. கழலுதல். “பைந்தொடி சோரும்’’ (குறள். 1234). 11. நழுவுதல். “துகிலிறையே சோர்ந்த வாறும்’’ (திருவாச. 5 57). 12. விழுதல். 13. விட்டுநீங்குதல். ‘சூதரைச் சோர்த லினிது’’ (இனி. நாற். 24). 14. இறத்தல். “பாலகன்றான் சோர’’ (சிலப். 9: 6). ம. சோருக, க. சோர், தெ. சோலு. சோர் - சோர்வு = சொரிகை. வான்சோர் வினிதே’’ (இனி. நாற். 16) சோர் - சோரி = சிந்தும் அரத்தம். “ஓசைச் சோரியை நோக்கினன்’’ (கம்பரா. கிட்கிந். வாலிவதை. 69.). ம. சோரி. சோரியிளநீர் = செவ்விளநீர். (பதார்த்த. 69). சோரத் தேய்த்தல்= உடம்புள் எண்ணெய் இறங்கத் தேய்த்தல். சோரப் பெய்தல் = பெருமழையாகப் பொழிதல். |