தீண்டு - தீட்டு = 1. தாழ்ந்தவன் உயர்ந்தவனைத் தொடுவதால் ஏற்படும் தூய்மைக் குலைச்சல். 2. பிறப்பு, இறப்பு, மாதவிடாய் முதலியவற்றால் ஏற்படும் தூய்மைக்கேடு. தீண் - தீட்பு = பிறரைத் தொட்டுத் தூய்மை குலைக்கத்தக்க இழிவு. தீட்பு - தீழ்ப்பு = இழிவு, தீட்டு. துண் - துடு - துடவை = தோட்டம். “தோன்றாத் துடவையி னிட்டனள் நீங்க’’ (மணிமே. 13 க 10). 2. சோலை (சூடா.). 3. விளைநிலம். “ஆத்தொழு வோடை துடவையுங் கிணறும்’’ (திவ். பெரியாழ். 5: 1: 5). துள் - தொள் - தோள் = 1. திரண்ட மேற்கை. “சிலைநவி லெறுழ்த்தோ ளோச்சி’’ (பெரும்பாண். 145). 2. கை, “தோளுற்றொர் தெய்வந் துணையாய்’’ (சீவக. 10). “குன்றன்ன குவவுத் தோளான்’’, “எழுவுறழ் திணிதோளான்’’ என்னும் உவமைகளாலும்; தோள் கொட்டுதல், தோள்கொடுத்தல், தோள்மாற்றுதல் என்னும் வினைகளாலும்; தோட்கடகம், தோட் பட்டை என்னும் பெயர்களாலும்; தோள் என்பது மேற்கையே யென்றும், புயம் என்னும் வடசொல் ஓரளவு வழக்கூன்றவே தோள் என்னும் தென்சொல் ஒருசிறிது வழக்கு வீழ்ந்ததென்றும், அறிந்து கொள்க. தொள் - தொழு = 1. மாட்டு மந்தை. 2. மாட்டுக் கொட்டில். “ஏறுதொழூஉப் புகுத்தனர்’’ (கலித். 101). 3. பட்டிமாடுகளை அடைக்கும் இடம். 4. காட்டு விலங்குகளை அடைக்குங் கூடு. “தொழுவினிற் புலியானான்’’ (கம்பரா. மூலபல. 181). தொழு - தொழுகு = மாட்டுத்தொழு (பிங்.). தொழுதல் = கூடுதல். தொழு- தொழுதி = கூட்டம். “இரும்பிடித் தொழுதியொடு’’ (புறம். 44). 2. திரட்சி. “தொழுதிச் சிறகிற் றுயராற்றுவன. ’’ (சீவக. 1187). தொழு - தொகு. ழ - க, போலித்திரிபு. ஒ.நோ : மழவு - மகவு, முழை -முகை. தொகுதல் = 1. கூடுதல். 2. நெருங்குதல். 3. அடுக்கி வருதல். “உம்மைதொக்க எனாவென் கிளவியும்’’ (தொல். சொல். 291). 4. ஒன்றாதல். 5. மொத்தமாதல். 6. சுருங்குதல். “தொகுபீலி கோலின’’ (கம்பரா. வனம்பு. 1). 7. ஒடுங்குதல். “அசுத்த தத்துவங்கள் தொகும் முதலில்’’ (கோயிற்பு. இரணிய வன்ம. 2). 8. மறைதல். “மெய்யுருபு தொகாஅ இறுதியான’’ (தொல். சொல். 105). |