பக்கம் எண் :

வேர்ச்சொற் கட்டுரைகள்

சரக்குப் பண்ணுதல் = வெயிலிற் காயவைத்தல்.

சரக்குப் பிடித்தல் = வணிகத்திற்குப் பண்டங்களை மொத்தமாக வாங்குதல்.

சரக்குக் கட்டுதல் = விற்பனைக்குப் பண்டம் அனுப்புதல்.

சரக்குப் பறித்தல் = கப்பலினின்று பண்டங்களை இறக்குதல்.

சரக்கேற்றுதல் = வண்டியிலும் கப்பலிலும் வணிகப்பண்டம் ஏற்றுதல்.

சரக்கு மாறுதல் = பண்டமாறுதல்.

கிளைக் கருத்துகள்

1. சினம்

சுள் - சுள்ளம் = சினம். சுள்ளம் - சுள்ளக்கம் = சினம். சுள்ளக்கம்- வ. க்ஷுள்ளக்க. சுள்ளாப்பு = பழிச்சொல். “சுள்ளப்பெல்லாம் பொல்லாப்பு’’ (பழமொழி). சுள் - சுளி. சுளிதல் = சினத்தல். “கழை காண்டலுஞ் சுளியுங் சுளியானை’’ (திருக்கோ. 111).

சுளித்தல் = 1. சினத்தல். “சுளிமுகக் களிறனான்’’ (சீவக. 298). 2. வெறுத்தல் (சைவச. மாணாக். 33).

சுண்டுசொல் = சுடுசொல்.

சுடுசுடு வென்றிருத்தல் = சினவியல்பா யிருத்தல்.

சுடுமூஞ்சி, சுடுநோக்கு, சுடுசொல் என்பன சினக்கருத்தை யுணர்த்துதல் காண்க. சினம் நெருப்பை யொத்த குணமாதலின், நெருப்பைக் குறிக்குஞ் சொல் சினத்தையுங் குறித்தது. எரிதல் என்னுஞ் சொல் சினத்தலையுங் குறித்தலையும், “சினமென்னுஞ் சேர்ந்தாரைக்கொல்லி’’ என்று திருவள்ளுவர் கூறியிருத்தலையும் நோக்குக.

2. உறைப்பு

சுவைகளுள் நெருப்புப் போன்றது உறைப்பு.

சுள் = உறைப்பு. க. சுள்.

சுள்ளிடுதல் (சுள்ளெனல்) = உறைத்தல். சுள்ளென்று உள்ளே போகும் என்பது உலகவழக்கு.

சுள்ளக்காய் = மிளகாய். சுள்ளிடுவான் = மிளகு.