பக்கம் எண் :

89

சுள் - சுட்பு - சுப்பு. சுப்பெனல் = விரைந்து நீர் வற்றுதல். சுப்பு - சுப்பல் = சுள்ளி. சுப்பு - சுப்பி = சுள்ளி. சுள்ளி சுப்பல் (சுப்பி) என்பது உலக வழக்கிணைமொழி.

சுப்பு - சும்பு - சம்பு - சாம்பு.

சாம்புதல் = 1. எரிதல். 2. வாடுதல். “நெய்தற்பூச் சாம்பும் புலத்தாங்கண்’’ (பட்டினப். 12). 3. கெடுதல். “செறிற் சாம்புமிவள்’’ (கலித். 78). 4. குவிதல் (திவா.). 5. ஒடுங்குதல் (பிங்.). 6. உணர் வழிதல். “சாதல் காப்பவரு மென்றவத்திற் சாம்பினார்’’ (கம்பரா. சுந்தர. உருக்காட். 21). 7. ஒளி மழுங்குதல். “மன்னரெல்லாந் தளர்ந்துகண் சாம்பினாரே’’ (சீவக. 811).

சாம்பு - சாம்பல் = 1. எரிந்த சாணம். “சுடுகாடான சாம்ப லரங்கத்திலே நிருத்தமாடி’’ (பு. வெ. 9 43, உரை). 2. வாடற்பூ. “ஆம்பற் பூவின் சாம்ப லன்ன’’ (குறுந். 46). 3. முதுமை (பிங்.). 4. பருத்தி புகையிலை முதலிய பயிர்களைக் கெடுக்கும் பூச்சி. 5. சாம்பல் நிறம். எ-டு: சாம்பல்வாழை. ம. சாம்பல்.

சாம்பல் - சாம்பர். 1. திருநீறு. “சாம்ப ரகலத் தணிந்தாய் போற்றி’’ (தேவா. 967:4). எரிந்த தூள். “முடிசார்ந்த மன்னரு மற்றுமுள் மண்ணாவதுங் கண்டு’’ (பட்டினத். திருத்தில்லை, 7).

சுள் - சுர் - சுர் - சுரசுரா = சிறு பிள்ளைகள் கொளுத்தி விளையாடும் வாணவகை.

சுர் - சுரம் = 1. தீப்போற் சுடும் பாலைநிலம். “சுரமென மொழியினும்’’ (தொல். பொருள். 216). “வெங்க லழற்சுரந் தாம்படர்ந்தார்’’ (பு.வெ. 2:3). 2. அருநெறி (திவா.).

சுரம் - . ஜ்வர (காய்ச்சல்).

சுள் - சள் - சண்டு = காய்ந்த புற்றாள், கூளம்.

சுர் - சர் - சருகு = 1. காய்ந்த இலை. “ஒலியா லசையச் சருகெழ’’ (வெங்கைக்கோ. 173). “உதிர்சருகு கந்தமூ லங்களேனும்’’ (தாயு. சச்சி.).

சண்டுசருகு என்பது உலகவழக் கிணைமொழி.

சர் - சரகு - சரக்கு = 1. காய்ந்த பண்டம். ‘காயவைத்ததெல்லாம் சரக்காகி விட்டதா?’ (உ.வ.). 2. காய்ந்த வணிகப் பண்டம். 3. வணிகப் பண்டம். 4. மருந்துப்பண்டம். எ-டு: பலசரக்கு. 5. கல்வியறிவு. ‘அவரிடத்தில் நிரம்பச் சரக்கிருக்கிறது’ (உ.வ.).