நுல்2 (துளைத்தற் கருத்துவேர்) நுல் - நொல் - நொலை = உட்டுளையுள்ள அப்பவகை. நொலை - நொலையல் (பிங்.). நொல் - நெல் - நெலி. நெலிதல் = கடைதல். நெலி - ஞெலி. ஞெலிதல் = 1. தீக்கடைதல். “ஞெலிதீ விளக்கத்து” (புறம். 247). 2. குடைதல் (அக. நி.). 3. உரசுதல். “ஞெலிகழை” (ஐங். 307). ஞெலி = உரசித் தீப்பற்றும் மூங்கில். “ஞெலிசொரி யொண்பொறி” (அகம். 39). நெல் - நெர் - நெரு - நெருப்பு = மூங்கில் ஒன்றோடொன்று உரசிப் பற்றும் தீ. நொல் - நோல் - நோலி - நோனி - வ. யோனி. இச் சொற்கு “யு” (to unite) என்பதை வடவர் வேராகக் காட்டுவது பொருந்தாது. நுல் - நல் - நல்லி = உட்டுளையுள்ள மூளை யெலும்பு. நல்லி - இ. நல்லீ. நல் - நால் - நாலி - நாலிகை = உட்டுளையுள்ள மூங்கில். நுல் - நுள் - நுளை - நுளையன் = 1. நீருட் புகுந்து அல்லது முழுகி மீன் பிடிப்பவன். 2. நெய்தல்நிலத்தான் (திவா.). ஒ.நோ.: ம. முக்குவன் = மீன் பிடிப்பவன், நெய்தல்நிலத்தான். நுளை = நுளையர் குலம். நுள் - நள் = 1. உள். 2. நடு. க. நள். நள்ளிடை = நடுவிடம். நள்ளிரவு = நடு இரவு. ஒ.நோ.: அகடு = உள், நடு. |