பக்கம் எண் :

19

“வெள்ளை நாளிகேரம் விரியா நறும்பாளை”     (தேவா. 106:5).

முந்துநூல் கண்டு முறைப்பட வெண்ணிப் புலந்தொகுத்த போக்கறு பனுவலாகிய தொல்காப்பியம்,

“உரிவரு காலை நாழிக் கிளவி
இறுதி யிகரம் மெய்யொடுங் கெடுமே
டகரம் ஒற்றும் ஆவயி னான”        (240)

“திரிபுவேறு கிளப்பின் ஒற்றும் உகரமும்
கெடுதல் வேண்டும் என்மனார் புலவர்
ஒற்றுமெய் திரிந்து னகார மாகும்
தெற்கொடு புணருங் காலை யான”         (432)

என்று கூறுவதினின்று, மூங்கில் போன்றே தென்னையும் குமரி நாட்டுத் தொன்மை யுடைமை உய்த்துணரப்படும்.

நாளி - நாடி - நேடி = மூங்கில் (மலை.).

தனிச்சொல், கூட்டுச்சொல் எனச் சொல் இருதிறப்படுவது போன்றே, தனிக்கருத்து, கூட்டுக்கருத்து எனக் கருத்தும் இரு திறப்படும்.

நுழைதல் என்னுஞ் சொல்லில் நுண்மை, புகவு என்னும் இரு கருத்துகள் கலந்துள்ளன. இடுக்கமான வாயில் அல்லது புழை அல்லது இடைவெளி வழியாக, உடம்பை ஒடுக்கியும் ஒடுக்காதும் உட்செல்வது நுழைதல் என்றும், உடம்பைச் சற்றும் ஒடுக்காது, நிமிர்ந்து தாராளமாக ஒரு பெருவாயில்வழி உட்செல்வது புகுதல் என்றும் சொல்லப்படும். இவ் வழக்கு, காட்சிப் பொருள் கருத்துப் பொருள் ஆகிய இருவகைக்கும் பொருந்தும். ஆதலால், புகவுச் சீட்டை நுழைவுச்சீட்டு என்றும், புகவுத் தேர்வை நுழைவுத்தேர்வு என்றும் வழங்குதல் தவறாம்.

நுழு - நுழுது. நுழுதுதல் = தலைமயிரைச் சுருட்டி நுழைத்து முடித்தல். “மயிர்நுழுதி மருங்குயர்ந்த தேசுடைய சிகழிகையில்” (பெரியபு. ஆனாய. 15). க. நுலிசு, தெ. நுலுமு.

நுழுது - நுழுந்து. நுழுந்துதல் = (செ. குன்றாவி.) 1. நுழைத்தல், செருகல். 2. தலைமயிரை முடித்தல். “திருக்குழலைக் குலைத்து நுழுந்த” (ஈடு, 10 3. நுழைத்து மறைவான இடத்தில் வைத்தல், மறைத்து வைத்தல்.

(செ. கு. வி.) 1. பதுங்குதல் (யாழ்ப்.). 2. நழுவுதல் (யாழ்ப்.). 3. நகர்தல் (யாழ்ப்.).