பக்கம் எண் :

23

நிகர்தல் = ஒத்தல். “மஞ்சை நிகருந் தியாக வள்ளலே” (விறலி விடு. 902).

நிகர்த்தல் = 1. விளங்குதல். “தஞ்சே ணிகர்காவின்” (திருக்கோ. 183). 2. ஒத்தல். “கண்ணொடு நிகர்க்குங் கழிப்பூங் குவளை” (தொல். பொருள். 290). 3. உறழ்தல், மாறுபடுதல். “தன்னொடு நிகரா வென்னொடு நிகரி” (ஐங். 67).

நிகர்ப்பு = ஒப்பு, போர்.

நிழல் - நிறன் - நிறம் = 1. ஒளி. “நிறப்பெரும் படைக்கலம்” (கம்பரா. தைல. 30). 2. வண்ணம். “நிறங்கொள் கண்டத்து நின்மலன்” (தேவா. 370 4). 3. சாயம். 4. இயல்பு. “வின்னிற வாணுதல்” (திருக்கோ. 58). 5. இசை, இசைத்திறம். (ஈடு, 2 6 11). 6. ஆளத்தி வகை. “நிறவாளத்தி நிறம்குலை யாமற் பாரணை யுடனிகழும்” (சிலப். 3 26, உரை). 7. புகழ். “இவனோடு சம்பந்திக்கை தரமன்று நிறக்கேடாம்” (ஈடு, 4 9 3). 8. ஒளியுள்ள மார்பு, மார்பு. “செற்றார் நிறம்பாய்ந்த கணை” (கலித். 57). 9. நடுவிடம். “கடலிற் றிரைநிறஞ் சேர்மத்தின்” (திருமந். 2313). 10. உடம்பு. “மெல்லி யலைமல்லற் றன்னிற மொன்றி லிருத்திநின்றோன்” (திருக்கோ. 58). 11. தோல். “புலிநிறக் கவசம்” (புறம். 13).

. நிறம்.

நெல் = பொன்போல் விளங்கும் தவசம் (கூலம்). “சடைச் செந்நெல் பொன்விளைக்குந் தன்னாடு” (நள. 68). 'பொன்விளைந்த களத்தூர்' என்னுந் தொடர்களை நோக்குக. நெல்லிற்குச் சொல் என்னும் பெயர் தோன்றியதும் இக் கரணியம்பற்றியே.

சுல் - சுல்லி = அடுப்பு, மடைப்பள்ளி.

சுல் - சுள் - சுடு - சுடர். சுல் - சொல் - சொலி. சொலித்தல் = எரிதல், விளங்குதல். சொலி - வ. ஜ்வல்.

., . நெல்.

நெற்கஞ்சி, நெற்சோறு, நெற்பொரி என்னுங் கூட்டுச் சொற்களில், நெல் என்பது நெல்லரிசியைக் குறிக்கும்.

நெல் - நெள் - நெழு - நெகு - நெகிழ் - நெகிழி.

நெகிழி = நெருப்பு (அக. நி.).

நெகிழி - நெகிடி = நெருப்புக் குவை. “மதயானை... நெகிடிக்கெனப் பெரிய கட்டை மிகவேந்தி” (தாயு. மௌனகுரு. 7). தெ. நெகடி.