பக்கம் எண் :

வேர்ச்சொற் கட்டுரைகள்

நெகிழி - ஞெகிழி = 1. தீக்கடை கோல். “ஞெகிழி பொத்த” (குறிஞ்சிப். 226). 2. கொள்ளிக்கட்டை. “விடுபொறி ஞெகிழியிற் கொடிபட மின்னி” (அகம். 108). 3. தீ (பிங்.).

நெகு - நகு. நகுதல் = 1. விளங்குதல், திகழ்தல். “பொன்னக் கன்னசடை” (தேவா. 644:1). 2. முகம் விளங்குமாறு சிரித்தல். “நகுதற் பொருட்டன்று நட்டல்” (குறள். 784). 3. முகம் விளங்குதற் கேற்ப அகம் மகிழ்தல். “மெய்வேல் பறியா நகும்” (குறள். 774). 4. பூ மகிழ்தல் போன்று மலர்தல். “நக்க கண்போ னெய்தல்” (ஐங். 151). 5. சிரித்து அவமதித்தல். “ஈகென் பவனை நகுவானும்” (திரிகடு. 74). . நகு (g), தெ. நவ்வு.

நகு - நகல் - நக்கல் = 1. ஒளி (அரு. நி.). 2. சிரிப்பு (சூடா.). 3. இகழ்ச்சி, நகையாண்டித்தனம் (பரிகாசம்). அவன் நக்கலாய்ப் பேசுகிறான் (உ.வ.).

நகு - நகை = 1. ஒளி. “நகைதாழ்பு துயல்வரூஉம்” (திருமுருகு. 86). 2. சிரிப்பு. “நகைமுகங் கோட்டி நின்றாள்” (சீவக. 1568). 3. மகிழ்ச்சி. “இன்னகை யாயமோ டிருந்தோற் குறுகி” (சிறுபாண். 220). 4. இன்பம். “இன்னகை மேய” (பதிற். 68 5. பூவின் மலர்ச்சி. “நகைத்தாரான் தான்விரும்பு நாடு” (பு. வெ. 9 17). 6. மலர். “எரிநகை யிடையிடு பிழைத்த நறுந்தார்” (பரிபா. 13:59). 7. நட்பு. “பகைநகை நொதும லின்றி” (விநாயகபு. நைமி. 25). 8. நயச்சொல் (திவா.). 9. விளையாட்டு. “நகையேயும் வேண்டற்பாற் றன்று” (குறள். 871). 10. நையாண்டி (பரிகாசம்). “நகையினும் பொய்யா வாய்மை” (பதிற். 70 12). 11. அவமதிப்பு. “பெறுபவே... பலரா னகை.” (நாலடி. 377). 12. பல்லிளிப்பு. 13. அணிகலம். 14. முத்து. “அங்கதிர் மணிநகை” (சீவக. 603). 15. முத்துமாலை. “கோதை நகையொருத்தி” (கலித். 92 33). 16. பல். “நிரைமுத் தனைய நகையுங் காணாய்” (மணிமே. 20 49). 17. நகைச்சுவை. “நகையே அழுகை இளிவரல் மருட்கை” தொல். மெய்ப். 3).

., தெ., து. நக (g), . நக (g), நகெ (g).

நகு - நகார் = பல். “மடவோர் நகாஅர் அன்ன நளிநீர் முத்தம்” (சிறுபாண். 57).

நகு - நங்கு = நையாண்டி. “நங்கு தெறிப்பதற்கு நாடெங்கும் போதாது” (ஆதியூரவதானி).

நங்குதல் = நையாண்டி செய்தல். “நங்க வொழியினும்” (பழமலை. 50). தெ. நங்கு.