பக்கம் எண் :

வேர்ச்சொற் கட்டுரைகள்

நெடு - நெடுகு. நெடுகுதல் = 1. நீளுதல். 2. ஓங்கி வளர்தல். 3. நீடித்தல். 4. கடந்து போதல். 5. சாதல் (W.).

நெடுகு - நெடுக (வி.எ.) = 1. நீளமாக. 2. நேராகத் தொடர்ந்து. நெடுகப்போ (உ.வ.). 3. முழுத் தொலைவும். வழி நெடுக மழை பெய்தது (உ.வ.).

நெடுக - நெடுகல் - நெடுகலும் = காலம் முழுதும். நெடுகலும் களவாடியே வந்திருக்கின்றான் (உ.வ.).

நெடுகு - நெடுக்கு = 1. நீட்சி. 2. நீளவாட்டு. நெடுக்குச்சுவர் (உ.வ.).

நெடுக்கு - நெடுக்கம் = நெடுமை. ம.நெடுக்கம். நெடுக்கு - நெடுங்கு = நீட்சி.

நெடு - நெடுப்பு - நெடுப்பம் = நீட்சி (W.).

. நெடுப்பு, தெ. நிடுப்பு.

நெடுந்தகை = 1. பெரிய மேம்பாடு (பு. வெ. 46). 2. பெரிய மேம்பாட்டாளன் (பு. வெ. 27). 3. பெரிய நிலையையுடையவன் (பு. வெ. 79, கொளு). 4. அளத்தற்கரிய தன்மையை யுடையவன் (பு. வெ. 191).

நெடுநெடுத்தல் = மிக நீண்டிருத்தல் (யாழ். அக.). நெடு நெடுகுதல் = மிக நீண்டிருத்தல் (யாழ்ப்.). நெடுநெடெனல் = நெடு வளர்ச்சிக் குறிப்பு. நெடு - நெடி. நெடித்தல் = 1. நீட்டித்தல். 2. காலந்தாழ்த்தல். “நெடியா தளிமின்” (சிலப். 16 21).

நெடி - நெடிப்பு = நெடுநேரம். “நெடிப்புறச் சானமுற் றிருந்து” (சேதுபு. பராவசு. 37).

நெடிது = காலந்தாழ்த்து. “நெடிது வந்தன்றா னெடுந்தகை தேரே” (புறம். 296).

நெடியோன் = 1. நெட்டையன். 2. குறள் தோற்றரவில் நெடிதாக வளர்ந்த திருமால். “செங்க ணெடியோன் நின்ற வண்ணமும்” (சிலப். 11 51). 3. பெரியோன். “முந்நீர் விழவி னெடியோன்” (புறம். 9). நெடியன் - க. நிடியன்.

நெடு - நெடில் = 1. நீளம் (திவா.). 2. நீளமானது. 3. நெட்டெழுத்து. “குறிலே நெடிலே குறிலிணை குறினெடில்” (தொல். செய். 3). 4. பதினைந்து முதல் பதினேழெழுத்து வரை கொண்ட கட்டளை நெடிலடி.