“மூவைந் தெழுத்தே நெடிலடிக் களவே ஈரெழுத்து மிகுதலும் இயல்பென மொழிப.” (தொல். செய். 36) 5. ஐஞ்சீரடி, “அளவடி நெடிலடி நாற்சீ ரைஞ்சீர்” (யாப்பருங். 24). 6. மூங்கில். “நெடில் படுத்த வெங்கானம்” (வில்லி பா.வேத்.10). நெடு - நெட்டு = 1. நெடுமை. 2. நெடுந்தொலைவு. “நெட்டிலே யலையாமல்” (தாயு. மலைவளர். 2). 3. ஓரிடத்திற்குப் போய்த் திரும்பும் தடவை (W.). 4. உப்பு மேடை (C.G.). 5. செருக்கு. “நெட்டது செய்ய லாகாது காணும்” (இராமநா. உயுத். 23). 6. குலை (W.). 7. ஒட்டாரம். ஒரு நெட்டிற்கு நிற்கிறான் (உ.வ.). 8. காம்பு (யாழ்ப்.). நெட்டு - நெட்டம் = 1. நெடுமை. 2. செங்குத்து. நெட்டு - நெட்டங்கம் = 1. செருக்கு. அவனை நெட்டங்க முடைக்கிறான் (உ.வ.). 2. பழித்துரை. “பொட்டான தேவர்களும் நெட்டங்கம் படிப்பாரே” (இராமநா. உயுத். 82). நெட்டு - நெட்டாங்கு = 1. நீளவாட்டு. 2. செருக்கு. 3. பழித்துக் காட்டுகை. நெட்டு - நெட்டில் = மூங்கில் (மலை.). நெடு - நெட்டை = 1. நெடுமை. “நெட்டைக் குயவற்கு” (திருப்பு. 1038). 2. ஒருவகைப் படைக்கலம். (பதிற். 42 3, உரை). 3. முழுவெலும்புக் கூடு (சது.). க. நெட்டனெ, தெ. நிட்ர. நெட்டோலை = திருமுகம். “அமணர் தங்கள்பாற் செல்ல விட்டான் கட்டி நெட்டோலை” (திருவாலவா. 26 2). நெட்ட நெடுமை = மிகு நீளம். “அட்டம் வளராது நெட்ட நெடுமை கொண்டன” (தக்கயாகப். 406, உரை). நெடு - நடு. நடுதல் = 1. மேனோக்கிய நீளவாட்டில் ஊன்றுதல். “நடவந்த வுழவரிது” (தேவா. 133 8). 2. அழுந்தவைத்தல். “திருவடியென் றலைமே னட்டமையால்” (திருவாச. 40 8). 3. நிலைநிறுத்துதல். ம.,க., நடு, து. நட்பினி, தெ. நாட்டு. நடு - நடவு = 1. நாற்றைப் பிடுங்கி நடுகை. “பேர்த்து நடவு செய்குநரும்” (திருவிளை. நாட்டுப். 20). 2. நட்ட பயிர். தண்ணீ ரில்லாமல் நடவு காய்கிறது. (உ.வ.) 3. நடவு கணக்கு (R.T.). |