எள் மிகச் சிறிய கூலமாதலால், நூ (நூல்) எனப் பெயர் பெற்றது. எள்ளளவும், எள்ளத்தனையும், எட்டுணையும் என்னும் வழக்குகளை நோக்குக. நூவு - நுவ்வு - நுவு - நுவல். நுவலுதல் = நுண்ணிய அறிவுச் செய்தியைச் சொல்லுதல். “மெய்தெரி வளியிசை அளவுநுவன் றிசினே” (தொல். 102). “நூலே நுவல்வோன் நுவலுந் திறனே” (நன். பாயி. 3). நுவல்வோன் = அறிவுச் செய்திகளைக் கூறும் ஆசிரியன். நுவல் - நூல் = ஒரு பொருள்பற்றிய அறிவுத் திரட்டு; கலை, கல்வித்துறை. பொத்தகம் என்பது ஒரு நூலைக் கூறும் ஏட்டுத் தொகுதி அல்லது தாட்கற்றை. பொத்தகக் களஞ்சியம் என்ன வேண்டியது, இன்று நூல்நிலையம் என வழங்குகின்றது. நூற்றல் = செய்யுளியற்றுதல். “நொய்யசொன் னூற்க லுற்றேன்” (கம்பரா. சிறப். 5). நுவல் - நுவள் - நுவண் - நுவணம் = 1. இடித்த மா. 2. கல்வி நூல் (அக. நி.). நுவண் - நுவணை = 1. நுட்பம் (திவா.). 2. இடித்த மா (திவா.). “மென்றினை நுவணை யுண்டு” (ஐங். 285). 3. பைந்தினை (பிங்.). 4. கல்விநூல் (சூடா.). நுவணை - நுணவை = 1. எள்ளுருண்டை (சூடா.) 2. இடித்த மா (சூடா.) நுவல் - நுவறு. நுவறுதல் = நுண்ணிதாக அல்லது பொடியாக அராவுதல். “நுணங்கர நுவறிய... மருப்பின்... பேரியாழ்” (மலைபடு. 35). நுவ்வு - நவ்வு - நவ்வி = 1. மான்குட்டி. “சிறுதலை நவ்விப் பெருங்கண் மாப்பிணை” (புறம். 2). 2. இளமை (சூடா.) 3. அழகு. “நவ்வித் தோகையர்” (கம்பரா. மாரீச. 14). நுவல் - நவல் - நவர் - நவரை = சிறுகாய் வாழைவகை. “நவரை - வாழைப் பழத்தான் மதி” (பதார்த்த. 765). நவரை - நுல் - நூல் = நுண்ணிய இழை. நூற்றல் = பஞ்சிழை யுண்டாக்குதல். |