பக்கம் எண் :

வேர்ச்சொற் கட்டுரைகள்

நுல் - நுள் - நுள்ளுதல் = கூரிய உகிராற் கிள்ளுதல். ம. நுள்ளுக.

நுள்ளு = 1. கிள்ளு. 2. சிறு துண்டு அல்லது துணுக்கு.

நுள் - நுள்ளல் = சிறிய உலங்கு.

நுள் - நுள்ளான் = கடிக்குஞ் சிற்றெறும்பு.

நுள்ளல் - நொள்ளல் = சிறிய உலங்கு.

நுள் - நொள்ளை = கைக்குழந்தை (நெ.வ.).

நுள் - நுளம்பு = சிறிய உலங்கு (திவா.).

. நுழம்பு, தெ. நுஷும.

நுள் - நுளு - நொளு - நொளுவல் = (யா. வ.). 1. முற்றா நிலை. 2. இளம்பாக்கு. நொளுக்கல் = நொளுவல். நுள் - நுழு - நுழாய். நுழாய்ப் பாக்கு = இளம் பாக்கு (யா.வ.). நுழு - நுழுவல் = இளம் பாக்கு.

நுழு - நுகு - நுகும்பு = பனங்குருத்து. “பனைநுகும் பன்ன” (புறம். 249). ஒ.நோ.: தொழு - தொகு. நுகு - நுங்கு = 1. இளம் பனங்காய். “நுங்கின் றடிகண் புரையுங் குறுஞ்சுனை” (கலித். 108 40). 2. இளம் பனஞ்சுளை. “நுங்குசூன் றிட்ட கண்”. (நாலடி. 44).

தெ. நுங்கு, . நொங்ஙு.

நுங்குப் பாக்கு = இளம்பாக்கு.

நுகு - நகு - நாகு = 1. இளமை. “நாகிலை” (சீவக. 1102). 2. இளம்பெண். 3. பெண் (தொல். மரபு. 3).

நுழு - நுழை. நுழைதல் = 1. நுண்மையாதல். “நுழைநூற் கலிங்கம்” (மலைபடு. 561). 2. கூரிதாதல். “நுழைந்த நோக்கிற் கண்ணுள் வினைஞரும்” (மதுரைக். 517).

நுழை = 1. நுண்மை (திவா.). 2. மதிநுட்பம் (W.).

நுழைவு = 1. நுண்மை. “நொசிவும் நுழைவும் நுணங்கும் நுண்மை” (தொல். உரி. 76). 2. நுண்ணறிவு. “நூலவர் நுழைவொடு நுழைந்து” (சூளா. இரத. 117).

நுழை - நூழை = நுண்மை (பிங்.).

நுள் - நுண் = 1. மிகச் சிறிய. 2. கூரிய. 3. நொய்ய. 4. பருப் பொருளல்லாத. நுண் - நுண்மை.

நுண் - நுண்பு = நுண்மை. “பாவியேங்கண் காண்பரிய நுண்புடையீர்” (திவ். இயற். பெரிய திருவந். 8). க. நுண்பு.