நுண்பு - நுட்பு = நுண்மை. நுட்பு - நுட்பம் = 1. நுண்மை. “நெய்யினும் யாருமறிவர் புகை நுட்பம்” (நாலடி. 282). 2. மதிநுட்பம். 3. அறிவு நுட்பம். 4. பொருள் நுட்பம். “திட்ப நுட்பஞ் சிறந்தன சூத்திரம்” (நன். 18). 5. கரந்துறை கோள்களுள் ஒன்று. “வட்டம், சிலை, நுட்பம், தூமம்” என்னும் கோள்கள் நான்கினும்” (சிலப். 10 102, உரை). 6. காலநுட்பம் (பிங்.). 7. ஒரு செய்தியைக் குறிப்பாலுணர்த்தும் பொருளணி. “தெரிபுவேறு கிளவாது குறிப்பினுந் தொழிலினும் அரிதுணர் வினைத்திற நுட்ப மாகும்.” (தண்டி. 63) 8. நுண்ணிய ஆராய்ச்சியுரை. நுண் - நுணங்கு = நுண்மை (தொல். உரி. 76). நுணங்கு - நுணக்கம் = 1. நுண்மை (யாழ். அக.). 2. கூர்மை (அக. நி.). நுண் - நுணா - நுணாவு. நுணாவுதல் = நுனிநாவால் தடவி யுணர்தல். நுணாவு - நுணாசு. நுணாசுதல் = நுனிநாவால் தடவியுணர்தல். நுணா - நுணை. நுணைத்தல் = நுணாவுதல் (நெ.வ.). ம.நுண, க. நொணெ. நுண் - நுணி = நுனி (யாழ். அக.). நுணித்தல் = 1. பொடியாக்குதல் (W.). 2. கூர்மையாக்குதல் (W.). 3. நுணுகி யாராய்தல். “தெய்வ நுணித்தறங் குறித்த மேலோர்” (கம்பரா. மந்திரப். 8). நுண் - நுணுகு = நுண்மை (திவா.). நுணுகுதல் = 1. நுட்பமாதல். “நுணுகிய நுசுப்பினார்” (சீவக. 2611). 2. மெலிதல். “தோணுணுகி” (புறம். 96). 3. கூர்மையாதல். நுணுகிய அறிவு (உ.வ.). நுணுகு - நுணுக்கு. நுணுக்குதல் = 1. பொடி செய்தல். 2. நுண்மையாக்குதல். 3. அரைத்தல். “நுண்மணல் விராய் நுணுக்குநர்” (திருவானைக். திருநிற். 14). 4. சிதைத்தல். “வெகுளி நுணுக்கும் விறலும்” (திரிகடு. 40). 5. கூர்மையாக்குதல் (இலக். அக.). 6. மதியை அல்லது அறிவைக் கூர்மையாக்குதல். “புலமை நுணுக்கி” (சீவக. 886). 7. சிறிதாயெழுதுதல். 8. நுட்பமாக வேலை செய்தல். 9. இன்னிசை யெழுப்புதல். “அது தன்னை வீணையிலே ஏறிட்டு நுணுக்கினாள்” (திவ். திருநெடுந். 15 122). 10. கையைக் குலுக்குதல் (கஞ்சத்தனம் செய்தல்). நுணுக்கு - நுணுக்கம். நுணுகு - நுணுங்கு = பொடி (பிங்.). |