பக்கம் எண் :

57

நிர - நிரவு. நிரவுதல் = (செ.கு.வி.) 1. வரிசையாயிருத்தல். “நிரவிய தேரின் மேன்மேல்” (கம்பரா. முதற்போர். 151). 2. பரவுதல். “பார்முழுதும் நிரவிக் கிடந்து” (தேவா. 152 9). 3. சமனாதல் (W.)

(செ. குன்றாவி.) 1. சமனாக்குதல். “உழாஅ நுண்டொளி நிரவிய வினைஞர்” (பெரும்பாண். 211). 2. சராசரி பார்த்தல். 3. அழித்து நிலமட்ட மாக்குதல். “அடங்கார் புரமூன்றும் நிரவ வல்லார்” (தேவா. 777 2).

நிரவல் = 1. சமனாதல். 2. சராசரி.

நிர - நிரப்பு. நிரம்புதல் = 1. நிறைதல். “பருவ நிரம்பாமே” (திவ். பெரியாழ். 1 2 17). 2. பருவமடைதல். அவள் நிரம்பின பெண் (யாழ்ப்.). 3. மிகுதல். “நெற்பொதி நிரம்பின” (கம்பரா. கார்கால. 74). 4. முதிர்தல். 5. முடிவுறுதல். “நெறிமயக் குற்ற நிரம்பா நீடத்தம்” (கலித். 12). க. நெர.

நிரம்பு - நிரப்பு = 1. நிறைவு (சூடா.). 2. சமதளம். 3. சமைதி (சமாதானம்). 4. வறுமை (ம.வ.). தெ. நிம்பு (நிம்ப்பு). நிரப்பு - நிரப்பம் = 1. ஒப்புமை. “நிரப்பமில் யாக்கை (கலித். 94). 2. சமம். “குடக்குந் தெற்குங் கோணமுய நிரப்பங் கொளீஇ” (பெருங். இலாவாண. 4 56 - 60). 3. நிறைவு. “நிரப்ப மெய்திய நேர்பூம் பொங்கணை” (பெருங். மகத. 14 62). 4. சிறப்பு (திவ். திருவாய். 1 2 3 பன்னீ.). 5. கற்பு (திவ். திருவாய். 5 3 3. பன்னீ.).

நிரை - நிரை. நிறைதல் = 1. நிரம்புதல். “நிறையின் னமுதை” (திருவாச. 27 2. மிகுதல். நிறையக் கொடுத்தான் (உ.வ.). 3. வியன்றிருத்தல் (வியாபித்திருத்தல்). இறைவன் எங்கும் நிறைந்திருக்கின்றான் (உ.வ.). 4. பொந்திகை (திருப்தி) யடைதல். “நிறைந்த மனத்து மாதரும்” (திருவாலவா. 38 5). 5. அமைதியாதல்.

. நிறயுக, . நெறெ.

நிர் - நெர் - நெரு. நெருநாள் = நெருங்கிய நாள், நேற்று. நெருநாள் - நெருநல் = நேற்று. “நெருந லுளனொருவன் இன்றில்லை” (குறள். 336).

நெருதலை நாள் = நேற்று. (திருக்கோ. 21, துறை விளக்கம்).

நெருநல் - நெருநை. “நெருநையி னின்று நன்று” (கலித். 91).

நெருநல் - நெருநற்று. “நெருநற்றுச் சென்றாரெங் காதலர்” (குறள். 1278).