நேசம் - நேசி. நேசித்தல் = 1. அன்பு வைத்தல். “நேசிக்கும் சிந்தை” (தாயு. உடல் பொய். 32). 2. ஆர்வங் கொள்ளுதல். “நேசித்து ரசவாத வித்தைக் கலைந்திடுவர்” (தாயு. பரிபூர.). நேசி = 1. அன்பன். 2. காதலி. நேயம் - நேம் = அன்பு. நேம் - நே = 1. அன்பு. 2. ஈரம். “நேஎ நெஞ்சின் கவுரியர் மருக” (புறம். 3). நெய் - நெய்ஞ்சு - நெஞ்சு = 1. அன்பு செய்யும் மனம். “தன்னெஞ்சே தன்னைச் சுடும்” (குறள். 293). 2. மனத்திற் கிருப்பிட மான நெஞ்சாங்குலை (இருதயம்). 3. நெஞ்சாங்குலையுள்ள மார்பு. “தலையினு மிடற்றினு நெஞ்சினு நிலைஇ” (தொல். எழுத்து. 83). 4. மனச்சான்று. “நெஞ்சை யொளித்தொரு வஞ்சக மில்லை” (கொன்றை. 54). 5. நடு. “குன்றி னெஞ்சுபக வெறிந்த” (குறுந். 1). 6. திடாரிக்கம். “நெஞ்சுளோ ரஞ்சும் வித்தை” (திருவாலவா. 35 17). ஒ.நோ.: வேய்ந்தன் - வேந்தன். ம.நெஞ்சு. நெஞ்சு - நெஞ்சம் = 1. மனம். “தாமுடைய நெஞ்சந் துணையல் வழி” (குறள். 1299). 2. அன்பு. “நெஞ்சத் தகநக நட்பது நட்பு” (குறள். 786). நெஞ்சு - நெஞ்சகம் = மனம். “நெஞ்சக நைந்து நினைமி னாடொறும்” (தேவா. 1173 1) நெய்தல் = நூலை ஆடையாக இணைத்தல். “நெய்யு நுண்ணூால்” (சீவக. 3019). 2. தொடுத்தல். “நெய்தவை தூக்க” (பரிபா. 19 80). ம. நெய்க, க. நெய். நெய் - நெயவு - நெசவு. நெய் - நெய்தல் = 1. வறண்ட கோடைக்காலத்தும் குளநிலத்தோ டொட்டியிருக்கும் கொடிவகை. “................................ அக்குளத்திற் கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போலவே ஒட்டி யுறுவார் உறவு” (மூதுரை, 17) 2. அக் கொடி வளரும் கடற்கரை. “எற்பாடு நெய்த லாதல் மெய்பெறத் தோன்றும்” (தொல். அகத். 8). ம., க. நெய்தல். |