பக்கம் எண் :

65

புணி - பிணி. பிணித்தல் = 1. சேர்த்துக் கட்டுதல். “பெருவெளிற் பிணிமார்” (மலைபடு. 326). 2. வயப்படுத்துதல். “கேட்டார்ப் பிணிக்குந் தகையவாய்” (குறள். 643). 3. கட்டித் துன்புறுத்துதல்.

பிணி - 1. கட்டுகை. “பிணியுறு முரசம்” (புறம். 25). 2. கட்டு. “பிணிநெகிழ்பு” (பரிபா. 3 55). 3. நெசவுத் தறியின் நூற்படை (யாழ்ப்.). 4. பற்று. “பொருட்பிணிச் சென்று” (அகம். 27). 5. (கட்டு நெகிழா) மொட்டு. “பிணிநிவந்த பாசடைத் தாமரை” (கலித். 59). 6. பின்னல். “பிணிகொள் வார்குழல்” (தேவா. 469 7. (கட்டி நெருக்குவது போன்ற) நோய். “பிணிக்கு மருந்து பிறமன்” (குறள். 1102). 8. துன்பம்.

பிணியகம் = காவலிடம். “பிறர் பிணியகத் திருந்து” (பட்டினப். 222).

பிணி - பிணிகை = கச்சு (பெண்டிர் மாரொட்டிச் சட்டை).

புண் - புணை. புணைத்தல் = கட்டுதல்.

புணை = 1. கட்டு, விலங்கு (சூடா.). 2. தெப்பம் (கட்டுமரம்). “நல்லாண்மை யென்னும் புணை” (குறள். 1134). 3. உதவி. “அறம்புணை யாகலு முண்டு” (கலித். 144). 4. ஒப்பு. “புணையில்லா வெவ்வ நோய்” (கலித். 124). 5. ஈடு. 6. ஆட்பிணை. “இவனுக்குப் புணை” (S.I.I.V. 173).

புணை - புணையல் = மாட்டுப் பிணைப்பு. புணைய லடித்தல் = பிணைத்த கடாவிட்டுக் கதிரை யுழக்குதல். புணையல் - புணைசல்.

புணை - பிணை. பிணைதல் = 1. சேர்தல், இணைதல். “கழுநீர் பிணைந்தன்ன வாகி” (சீவக. 491). 2. செறிதல். “பிணையூப மெழுந்தாட” (மதுரைக். 27). 3. புணர்தல். “மங்கையர் தம்மொடும் பிணைந்து” (திருவாச. 41

பிணை = 1. பொருத்து. “இதையுங் கயிறும் பிணையு மிரிய” (பரிபா. 10 2. கட்டு. 3. இணைக்கப்படுகை. “பிணையார மார்பம்” (பு. வெ. 12 4. பூமாலை. “வெறிகொண்ட முல்லைப் பிணைமீது” (பெரியபு. கண்ணப்ப. 57). 5. பொறுப்பாண்மை. “பிணைக் கொடுக்கிலும் போக வொட்டாரே” (திவ். பெரியாழ். 4 5 6. உடன்பாடு. (யாழ். அக.). 7. களைகண், பேணுகை. “பெட்டாங் கொழுகும் பிணையிலி” (நான்மணி. 91).

பிணை - பிணைச்சு = புணர்ச்சி (பிங்.).