பக்கம் எண் :

வேர்ச்சொற் கட்டுரைகள்

புலர் - புலரி = 1. விடியல். “புலரி புலருதென்று” (திருமந். 210). 2. கதிரவன். “தாமரைப் பூநனி முகிழ்த்தன புலரி போனபின்” (கம்பரா. சித்திர. 42).

புல் - புர் - புரை. புரைதல் = 1. பொருந்துதல். “புறத்தோ ராங்கட் புரைவ தென்ப” (தொல். கற்பு. 35). 2. தைத்தல். “தம்முடைய வஸ்திரத்தைப் புரையா நின்றாராய்” (ஈடு, 4 10 7). 3. ஒத்தல். “வேய்புரை பெழிலிய... பணைத்தோள்” (பதிற். 65 4. நேர்தல். “புணர்ந்தோரிடை முலையல்கல் புரைவது” (பரிபா. 6 55). க. புருள்.

புரை = ஒப்பு (பிங்.). தெ. புருது.

புரைய = 1. பொருந்த. 2. போல (உவமவுருபு), “கடுப்ப ஏய்ப்ப மருளப் புரைய” (தொல். உவம. 15).

புல் - புள் - புண் - புணர். புணர்தல் = 1. பொருந்துதல் (திவா.). 2. நட்பாடல். “ஊதிய மில்லார்ப் புணர்தல்” (நாலடி. 233). 3.ஏற்புடையதாதல். “குரல் புணர்சீர்” (புறம். 11). 4. மேற்கொள்ளுதல். “பொருவகை புரிந்தவர் புணர்ந்த நீதியும்” (பெருங். வத்தவ. 6 6. 5). 5. உடலிற் படுதல். “மென்முலைமேற் பனிமாருதம் புணர” (கம்பரா. சூர்ப்பண. 77). 6. கலவி செய்தல். “மன்னியவளைப் புணரப் புக்கு” (திவ். பெருமாள். 6 7. சொற்கூடுதல். “மொழிபுண ரியல்பே” (தொல். எழுத்து. புணரியல், 6). 8. கூடியதாதல். “புணரின் வெகுளாமை நன்று” (குறள். 308).

. புணருக, .பொணர்.

புணர்ச்சி = 1. சேர்க்கை (பிங்.). 2. ஓரிடத்தாரா யிருக்கை. “புணர்ச்சி பழகுதல் வேண்டா” (குறள். 785). 3. கலவி. “தகைமிக்க புணர்ச்சியார்” (கலித். 118). 4. சொற்கூட்டு. “எழுத்தோ ரன்ன பொருள்தெரி புணர்ச்சி” (தொல் எழுத்து. புணரியல், 39).

புணர்ப்பு = 1. பனுவல் (பிரபந்தம்). “நாயகன்பேர் வைத்துப் புணர்த்த புணர்ப்புக் கேட்டாற் போலே காணும்” (ஈடு, 5 9 3). 2. இணைப்பு. 3. கலவி செய்விப்பு. 4. சொற்கூட்டு. 5. சூழ்ச்சி. “முதியவன் புணர்ப்பினால்” (கலித். 25). 6. உடம்பு (சூடா.). 7. மாயம். “புணர்ப்போ கனவோ” (திருக்கோ. 17).

புணர்வு = 1. சேர்க்கை. 2. கலவி. “புணர்வின் னினிய புலவிப் பொழுதும்” (சீவக. 1378). 3. இணைப்பு (சூடா.). 4. உடம்பு (பிங்.).

புணர் - புணரி = கலந்தெழும் பேரலை. “வரைமருள் புணரி வான்பிசி ருடைய” (பதிற். 11).

புண் - புணி. புணித்தல் = சேர்த்துக் கட்டுதல்.