10. அமைதல். “அறநெறி பொருந்த” (கம்பரா. விபீடண. 43). 11. மனம் இசைதல். “கொணர்கு வாயெனப் பொருந்தினன்” (கம்பரா. மருத்து. 85). க. பொருது. பொருந்து - பொருத்து = 1. இணைப்பு (W.). 2. மூட்டு. 3. உடலெலும்பு மூட்டு. “பொருத்தெலாங் கட்டுவிட்டு” (பணவிடு. 298). 4. ஒன்றுசேர்ப்பு. “பொருத்துறு பொருளுண் டாமோ” (கம்பரா. கும்பகருண. 157). 5. நெற்றிமூலை மண்டையோட்டுப் பொட்டு. பொருத்து - பொருத்தம் = 1. பொருந்துகை. 2. தகுதி. “பொய்ம்முகங் காட்டிக் கரத்தல் பொருத்தமன்று” (திருக்கோ. 356). 3. இணக்கம். அவனுக்கும் எனக்கும் பொருத்தமில்லை (உ.வ.). 4. மணமக்களின் பிறப்பிய (ஜாதக) இணக்கம். பொருத்து - பொருத்தனை = 1. பொருத்தம். 2. நேர்த்திக்கடன். (துன்ப நிலையில் தெய்வத்தொடு இட்ட சூளை நிறைவேற்றுதல்). இதைச் சென்னைப் ப. க. த. அகரமுதலியில் “பிரார்த்தனை” என்னும் வடசொல்லின் திரிபாகக் குறித்திருப்பது குறும்புத்தனமாம். பொருத்து - பொத்து. பொத்துதல் = 1. பொருத்துதல். 2. கலத்தல். “நெஞ்சம் பொத்தி” (பு. வெ. 11, ஆண்பால் 4). 3. தீ மூட்டுதல். “கனையெரி பொத்தி” (மணிமே. 2 42). 4. தைத்து மூட்டுதல். 5. தைத்தல். இலையைப் பொத்து (உ. வ.). 6. மாலை கட்டுதல். “மறுகண்ணியும் பொத்தி” (ஈடு, 1 3 1). 7. கற்பனை செய்தல். “இல்லாத் தெய்வம் பொத்தி” (தேவா. 658 8. திறப்பின் அல்லது கிழிவின் இருபுறத்தையும் பொருத்தி மூடுதல். பொல்லம் பொத்துதல் (உ. வ.). 9. வாய் கண் காது முதலியவற்றை மூடுதல். “தன்செவித் தொளையிரு கைகளாற் பொத்தி” (கம்பரா. இரணிய. 22). 10. விரல் மடக்கி உள்ளங்கையை மூடுதல் (உ. வ.). 11. மறைத்தல். “செம்பால்... கிளர்படி பொத்தின” (கம்பரா. கரன்வதை. 100). 12. புதைத்தல். “மண்ணிடைக் கடிது பொத்துதல்” (கம்பரா. விரா தன்வதை. 43). (செ. குன்றிய வி.). = நிறைதல். “வான்மேற் பொத்தின குழு” (கம்பரா. கரன்வதை. 100). க., ம. பொத்து. பொத்து - பொத்தகம் = 1. சுவடி. “நிறைநூற் பொத்தகம் நெடுமணை யேற்றி” (பெருங். உஞ்சைக். 34 26). 2. நிலக்கணக்கு. “பொத்தகப்படி குழி” (S.I.I. III, 80). |