பக்கம் எண் :

வேர்ச்சொற் கட்டுரைகள்

3. ஒப்பாதல். “மலை யெத்தனை யத்தனை... பொருகிற்பன” (கம்பரா. அதிகா. 150). 4. தடவுதல். “வீணை பொருதொழிலும்” (சீவக. 1795). 5. தாக்குதல். “பொருபுனல் தரூஉம்” (சிறுபாண். 118). 6. கடைதல். “ஒன்றைக் கிரிமத்தைப் பொருது” (திருப்பு. 1). 7. வன்மையாய் வீசுதல். “குரூஉப் புகைபிசிரக் கால்பொர” (பதிற். 15 6). 8. போர் செய்தல். “ஈரைம் பதின்மரும் பொருதுகளத் தொழிய” (புறம். 2). 9. சூதாடுதல். “போது போகுமா றிருந்து பொருதும்” (பாரத. சூது. 169). 10. மாறுபடுதல். “கண்பொர விளங்குநின் விண்பொரு வியன்குடை” (புறம். 35).

பொரு = 1. ஒப்பு. “பொருவாகப் புக்கிருப்பார்” (தேவா. 780 11). 2. உவமை (பிங்.). 3. எதிர்த்தடை. “ஆறு சமயங்கட் கெல்லாம் பொருவாகி நின்றானவன்” (திவ். திருவாய். 9 4 8).

பொருமுக வெழினி = பொருந்தி வரும் இரட்டைத் திரை. பொருங்கதவு = இரட்டைக் கதவு.

பொரு - பொருவு. பொருவுதல் = 1. பொருந்துதல். 2. ஒத்தல். “உன்னைப் பொருவு முனிவோர்” (கந்தபு. திருக்கல். 55). 3. நேர்தல். “போன்றன வினைய தன்மை பொருவியது” (கம்பரா. இரணிய. 152). 4. உராய்தல். “விற்கொணாண் பொருவுதோள்” (கம்பரா. நிந்தனை. 52).

பொருவு = ஒப்பு. “பொருவற்றா ளென்மகள்” (திவ். திருநெடுந். 19).

ஒப்புப்பொருவு, உறழ்பொருவு எனப் பொருவு இருவகை.

பொருவ = ஓர் உவமவுருபு. “புல்லப் பொருவ” (தொல். உவம. 11).

பொரு - பொருந். பொருநுதல் = 1. பொருந்துதல். “உண் பொருந்” (நன். 137). 2. உடன்படுதல் (W.).

பொருந் - பொருந்து. பொருந்துதல் = 1. நெருங்குதல். “பொருந்தவந் துற்ற போரில்” (கம்பரா. கும்பகருண. 13). 2. அடைதல். “வந்தடி பொருந்தி முந்தை நிற்பின்” (புறம். 10). 3. அளவளாவுதல் (பிங்.). 4. புணர்தல். “மணிமேகலை... பொருந்தின ளென்னும் பான்மைக் கட்டுரை” (மணிமே. 23 46). 5. இலக்கண நெறிப்படுதல். “பண்பொருந்த இசை பாடும்” (தேவா. 268 6. இயலுதல். “பூத மைந்தினும் பொருந்திய வுருவினாற் புரளான்” (கம்பரா. இரணிய. 18). 7. நிகழ்தல். “புண்ணியம் பொருந்திற்று” (கம்பரா. கும்பகருண. 131). 8. நிறைவேறுதல் (W.). 9. தகுதியாதல்.