பக்கம் எண் :

75

பரு - பெரு - பெருமை.

பெருத்தல் = 1. பருத்தல். 2. மிகுதல். “கரடியாதி பெருத்த” (விநாயகபு.). இனம் பெருத்துவிட்டது (உ.வ.). 3. உயர்வாதல்.

பெருமை = 1. பருமை. 2. மாட்சிமை. “பெருமையுந் தன்னைத்தான் கொண்டொழுகி னுண்டு” (குறள். 974). 3. மிகுதி, பெரும்பான்மை. 4. வல்லமை. 5. கீர்த்தி. 6. செருக்கு. பதவி யுயர்ந்தவுடன் அவனுக்குப் பெருமை வந்துவிட்டது (உ.வ.). 7. எக்களிப்பு. நான் தமிழன் என்று சொல்லிக் கொள்வதிற் பெருமைப்படுகிறேன்.

பெரு - பெருகு. பெருகுதல் = 1. மிகுதல். “பெருகுமத வேழம்” (திவ். இயற். 2 75). 2. வளர்தல். “தளிபெருகுந் தண்சினைய” (பரிபா. 8 91). 3. வளர்ச்சியடைதல். “பண்பிலார் கேண்மை பெருகலிற் குன்ற லினிது” (குறள். 811) 4. நிறைதல். 5. முதிர்தல். “பெருகுசூ லிளம்பிடிக்கு” (கம்பரா. சித்திர. 10). 6. ஆக்கந்தருதல்.

பெருகு - . பெர்சு.

பெருகு = புளித்துப் பெருகும் தயிர் (பிங்.).

புரை - பிரை - பெருகு = பிரை குத்தியதால் தயிரான பால்,

தெ. பெருகு, .பெருகு, பெருங்ஙு.

பெருகு - பெருக்கு. பெருக்குதல் = 1. மிகுத்தல். 2. விரிவடையச் செய்தல். “வாரி பெருக்கி” (குறள். 512). 3. குப்பை கூட்டுதல். 4. ஓர் எண்ணை மற்றோர் எண்ணாற் குறித்த மடங்கு அதிகப்படுத்துதல்.

. பெருக்குக, தெ. பெருகு (g), . பெர்சிசு.

பெருக்கல் = 1. ஆக்கமடையச் செய்தல். “பின்யா னிவனைப் பெருக்கலு முற்றனன்” (பெருங். உஞ்சைக். 37 200). 2. குப்பை கூட்டுதல். 3. ஓர் எண்ணை மற்றோர் எண்ணாற் குறித்த மடங்கு அதிகப்படுத்துதல்.

பெருக்கம் = 1. மிகுதி. “உண்மைப் பெருக்கமாந் திறமை” (திருவாச. 42 7). 2. வளர்ச்சி. 3. ஆக்கம். “பெருக்கம் பெருமித நீர்த்து” (குறள். 431). 4. நீர்ப்பெருக்கமான வெள்ளம். “புதுப்பெருக்கம் போல” (நாலடி. 354). 5. நீடிப்பு. தாலிப் பெருக்கம் (உ.வ.).

பருக்கன் = பெருக்கன் = பரும்படியானது.

பெருக்கன் - பெருக்கான் = பெருச்சாளி (கோவை வழக்கு). பெருத்த எலி - பெருச்சாளி (மரூஉ). பெரு + சாளி (பெரும் பணப்பை)