என்று காளமேகப் புலவர் பகுத்தது பொருந்தாது. பரு - பரிய - பெரிய = 1. பருத்த. எ-டு: பெரிய காய். 2. பருத்தகன்ற. எ-டு: பெரிய வீடு. 3. அகன்ற. எ பெருநிலம். 4. மூத்த. எ-டு: பெரியண்ணன். 5. தலைமையான. எ-டு: பெரிய ஆசிரியர். 6. உயர்வான. எ-டு: பெரிய திருவடி. 7. சிறப்பான. எ-டு: பெரிய கொடை 8. திருச்சிறப்பான. எ-டு: பெரிய வெள்ளிக்கிழமை. 9. வலிய. எ-டு: பெரிய காற்று. 10. மிகுந்த. எ-டு: பெரிய செல்வம். 11. உயரமான. எ-டு: பெரிய மரம். 12. நீண்டுயர்ந்த. எ-டு: பெரிய மலை. பருமி - பருமிதம் - பெருமிதம் = 1. மேன்மை. “பெருக்கம் பெருமித நீர்த்து” (குறள். 431). 2. உள்ளக் கிளர்ச்சி, உள்ளக் களிப்பு (திவா.). 3. மேம்பாட்டுணர்ச்சி. “கல்வி தறுகண் இசைமை கொடையெனச் சொல்லப்பட்ட பெருமித நான்கே” (தொல். மெய்ப். 9) செருக்கு. “பெருமை பெருமித மின்மை” (குறள். 979). புல் - புது. ஒ.நோ.: மெல் - மெது. புது - புதல் = 1. செறிந்த தூறு. “புதன்மறைந்து வேட்டுவன் புட்சிமிழ்த் தற்று” (குறள். 274). 2. புல்லினம் (திவா.). 3. மருந்துப்பூடு (திவா.). புதல் - புதர் = தூறு. தெ., க. பொதரு. புது - புதா = 1. பெருநாரை. “புள்ளும் புதாவும்” (சிலப். 10 117). 2. மரக்கால் நாரை (சிலப். 10 117, அரும்.). புதா - புதை = அம்புக்கட்டு. “புதையம்பிற் பட்டு” (குறள். 597). 2. மரச்செறிவு, செடியடர்த்தி. 3. ஆயிரம் என்னும் தொகை. புது - பூது - பூதம் = 1. பருத்தது, பெரியது. 2. பெரும் பேய். “பூதங் காப்பப் பொலிகளந் தழீஇ” (புறம். 369 17). 3. கூந்தற்பனை (சங். அக.). நிலம் நீர் முதலிய ஐம்பூதங்களுள் ஒன்றைக் குறிக்கும் பூதம் என்னும் சொல் பூ (வ. bhu) என்னும் முதனிலையினின்று திரிந்தது. பூத்தல் - தோன்றுதல். இவ் விருவேறு சொற்களையும் ஒன்றாகக் காட்டியதோடு, வடசொல்லாகவுங் குறித்திருப்பது, சென்னைப் ப. க. த. அகரமுதலித் தொகுப்பாளரின் குறும்புத்தனமானது. பூதம் - பூதவம் = மிகப் பெரியதாய்ப் படரும் அல்லது பூதம் குடியிருக்கும் ஆலமரம் (திவா.). |