பூதம் - பூதன் = 1. மகன் (யாழ். அக.). 2. ஒரு பண்டை யியற் பெயர். “பொய்கை பூதன் பேயார்” (அஷ்டப். நூற்றெட். காப்பு). பூதம் - வ. பூத (bhuta). பூதன் - பூதல் - பூதலி. பூதலித்தல் = உடல் பருத்தல். புதை - புடை. புடைத்தல் = 1. பருத்தல். “மெச்சவே புடைத்த முத்தமார் தனத்தி” (திருப்பு. 1176). 2. வீங்குதல். “உடல்புடைப்ப வடித்து” (திருவாலவா. 34 4) க. பொடெ. புடை = 1. பருத்த பாகம் (W.). 2. பகுதி. “மற்றப் புடை யெல்லாம் ஒவ்வாது” (இறை. கள. 1, ப. 23). 3. பக்கம். “ஒருபுடை பாம்பு கொளினும்” (நாலடி. 148). 4. சார்பு. 5. இடம் (பிங்.). 6. முறை. “நிர்வகிப்பதும் சிலபுடைகளுண்டு” (ஈடு, 10 10 11). புடை - புடைவி - புடவி = 1. பருத்த ஞாலம் (திவா.). 2. உலகம். “அதிர்வன புடவிக ளடையவே” (தக்கயாகப். 723). க. பொடவி, தெ. புடமி, பிரா. புடவீ - வ. ப்ருத்வீ. புடை - புடைவை = 1. சுற்றிக் கட்டும் ஆடை. “வெண் புடைவை மெய்சூழ்ந்து” (பெரியபு. திருநாவுக். 61). 2. மகளிர் சேலை. புடைவை - புடவை = 1. துணி. (S.I.I. IV, 31). 2. சேலை. புடை - புடம் - புட்டம் = 1. புடைத்த பின்புறம் (குண்டி). 2. புடைவை (பிங்.). தெ. புட்டமு. புட்டம் - வ. ப்ருஷ்ட. ஒ.நோ.: LG. but, Du. bot, Sw. but - buttock. புட்டம் - புட்டகம் = புடைவை. “புட்டகம் பொருந்துவ புனைகுவோரும்.” (பரிபா. 12 17). புட்டம் - புட்டா = வீங்கின விதை (அண்டம்). தெ. புட்ட (dd), க. புட்டெ (dd). புட்டா - புட்டை = பெருத்த விதை (அண்டம் elephantoid scrotum). புட்டம் - புட்டி = பருமை. “புட்டிபடத் தசநாடியும் பூரித்து” (திருமந். 574). புடை - புணை - பணை. பணைத்தல் = 1. பருத்தல். “பணைத்த வெம்முலை” (கம்பரா. எழுச்சி. 33). 2. செழித்தல் (நாலடி. 251). |