பக்கம் எண் :

வேர்ச்சொற் கட்டுரைகள்

பணை = 1. பெருமை. “பணையே பிழைத்தல் பெருப்பு மாகும்” (தொல். உரி. 41). 2. பருத்த மூங்கில். “பெரும் பணைத்தோள்” (பு.வெ. 11, ஆண்பாற். 1). 3. பெரிய முரசு. “வியன்பணை யுருமென வதிர்பட்டு” (பதிற். 39 5).

புது - பொது = 1. பலர் கூடிய கூட்டம், மன்று, அம்பலம், மக்கட்டொகுதி. 2. மன்று கூடும் இடம். 3. பலர்க்கும் அல்லது எல்லார்க்கும் உரிய நிலைமை. “பொதுநோக்கான் வேந்தன் வரிசையா நோக்கின்” (குறள். 528). 4. சிறப்பின்மை. “பொதுக் கொண்ட... வதுவை” (கலித். 66). 5. இயல்பு அல்லது வழக்கம். “உரை பொதுவே” (கம்பரா. முதற். 172). 6. எல்லார்க்கும் ஒத்த நடுவுநிலை.

ம. பொது, தெ. பொது (பொத்து).

பொது - பொதுள். பொதுளுதல் = 1. நெருங்குதல். “சிகையனல் பொதுளியதால்” (கம்பரா. இந்திரசித். 20). 2. நிறைதல். “ஞானங் குணங்கல்வி நூல்பொதுளி” (அரி சமய. பரகால். 7). 3. தழைத்தல். “இருள்படப் பொதுளிய” (திருமுருகு. 10).

பொது - பொதும்பு = 1. சோலை. “காந்தளம் பொதும்பில்” (அகம். 18). 2. குறுங்காடு. “முல்லையம் பொதும்பின்” (சீவக. 3042).

பொதும்பு - பொதும்பர் = 1. மரச்செறிவு. “பொழிலின் வியன் பொதும்பரின்” (திருக்கோ. 39). 2. இளமரக்கா. “வெயினுழை பறியாக் குயினுழை பொதும்பர்” (பெரும்பாண். 374). 3. சோலை.

பொது - பொதி = 1. தொகுதி. “பெய்கணைப் பொதிக ளாலே வளர்ந்தது பிறந்த கோபம்” (கம்பரா. நாகபா. 114). 2. கொத்து. “அம்பொதித் தோரை” (மலைபடு. 121). 3. உடல். “பொதியே சுமந்துழல்வீர்” (தேவா. 1154 4. பருமன். ஆள் பொதியாயிருக்கிறான் (உ.வ.). 5. அம்பலம். “மன்றும் பொதியினு மாமயில் சேர் தஞ்சை வாணன்” (தஞ்சைவா. 34). 6. பொதியமலை. “பொதிமா முனிவ” (சிவதரு. பாவ. 23).

பொதி - பொதிகை = பொதியமலை.

பொதி - பொதியம் = பொதியமலை. “பொற்கோட் டிமயமும் பொதியமும் போன்றே” (புறம். 2).

பொதி + இல் - பொதியில் = 1. அம்பலம். “தமனியப் பொதியிலும்” (மணிமே. 28 66). 2. பொதியமலை. “ஆஅய் மழைதவிழ் பொதியில்” (குறுந். 84).

பொதி - பொதிர். பொதிர்தல் = 1. வீங்குதல். “புனைதார் பொர நொந்து பொதிர்ந்தவென்” (சீவக. 1380). 2. மிகுதல்.