பொதிர்த்தல் = பருத்தல். “பொதிர்ந்த முலையிடை” (பரிபா. 21 25). பொது - பொத்து - பொத்தை = பருமையானது. பொத்தைக்கால் = யானைக்கால். பொத்தை மிளகாய் = தடித்த மிளகாய். பொத்தையன் = தடித்தவன் (யாழ். அக.). பொத்து - பொத்தி = 1. மடல்விரியா வாழைப்பூ (யாழ்ப்.). 2. சோளக்கதிர் (W.). 3. விதை (அண்டம்). 4. வரால்மீன். “மத்தியுஞ் சிறு பொத்தியும்” (குருகூர்ப் பள்ளு.). பொத்துப் பொத்தெனல் = தடித்திருத்தற் குறிப்பு. குழந்தை பொத்துப் பொத்தென்றிருக்கிறது (உ.வ.). பொத்து - பொந்து. பொந்து பொந்தெனல் = தடித்திருத்தற் குறிப்பு. பொந்தன் = தடித்தவன். பொந்தந்தடி = பெருந்தடி (நெல்லை). பொந்தத்தடி = பெருந்தடி (நாஞ்சில்). பொந்தான் பொதுக்கெனல் = தடித்தும் சதை தளர்ந்தும் இருத்தற் குறிப்பு. பொந்தான் - போந்தான் = பெருங்கோழி. பொந்து - பொந்தி = பருமை (சங். அக.). பொந்தி - போந்தி = வீக்கம் (யாழ். அக.). தெ. போத். போந்திக்கால் = யானைக்கால். தெ. போதக்காலு. பொது - பொதை = செடியடர்த்தி. பொது - போது - போதா = பெருநாரை (சிலப். 10 உரை). பொதி - போதி = மலை (பிங்.). புல் - பொல் - பொலி. பொலிதல் = 1. பெருகுதல் (W.). 2. மிகுதல். “கழுநீர் கண்ணகன் பொய்கை” (மதுரைக். 171). 3. சிறத்தல். “பொலிந்த வருந்தவத் தோற்கே” (புறம். 1). 4. செழித்தல். “பொலியு மால்வரை” (தேவா. 236 8). 5. நீடுவாழ்தல். “வழிவழி சிறந்து பொலிமின்” (தொல். செய். 109). பொலி - பொலிசை = 1. ஊதியம். “பொன்பெற்ற பொலிசை பெற்றார் பிணையனார்” (சீவக. 2546). 2. வட்டி. “பொலிசைக்குக் கொண்டவூரும்” (S.I.I. II, 82). ம. பொலிச. பொலியூட்டு = பொலிசையூட்டு. (S. I. I. III, 84 : 88). |