புகல் - புகல்வு = விருப்பம். “முனைபுகல் புகல்வின் மாறா மைந்தரொடு” (பதிற். 84 17). புள் - பிள் - பிண் - பிணி - பிடி = பெண்யானை. “பிடியென் பெண்பெயர் யானை மேற்றே” (தொல். மரபு. 52). பிணி = பற்று. “பொருட்பிணிச் சென்று” (அகம். 27). பிடித்தல் = 1. பற்றுதல். 2. விரும்புதல். பிண் - பிணா = 1. பெண். 2. பெண்டு. “பெண்ணும் பிணாவும் மக்கட் குரிய” (தொல். மரபு. 62). பிணா - பிணவு = பன்றி, புல்வாய், நாய், கரடி என்பவற்றின் பெண். “பன்றி புல்வாய் நாயென மூன்றும் ஒன்றிய என்ப பிணவின் பெயர்க்கொடை” (தொல். மரபு. 59) “எண்குதன் பிணவோ டிருந்தது போல” (மணிமே. 16 68). பிணவு - பிணவல் = மேற்குறித்த மூன்றன் பெண். “பிணவல் எனினும் அவற்றின் மேற்றே” (தொல். மரபு. 60). பிணா - பிண - பிணை = 1. விருப்பம். “பிணையும் பேணும் பெட்பின் பொருள” (தொல். உரி. 40). 2. விலங்கின் பெண் (பிங்.). “புல்வாய் நவ்வி உழையே கவரி சொல்வாய் நாடின் பிணையெனப் படுமே” (தொல். மரபு. 58) பெண்மான். “ பிணையேர் மடநோக்கும்” (குறள். 1089) பிள் - பெள். பெள் + தல் - பெட்டல். பெட்டல் = 1. விரும்புதல். “பிரித்தலும் பெட்டலும்” (தொல். கற்பு. 6). 2. செய்ய விரும்புதல். “பெட்டவை செய்யார்” (இனி. நாற். 23). 3. காதலித்தல். “பிறன்பொருளாட் பெட்டொழுகும் பேதைமை” (குறள். 141). பெட்பு = 1. விருப்பம். “குற்றங் காட்டிய வாயில் பெட்பினும்” (தொல். களவு. 11). “பெட்புறும்...... தீப நிகர்த்தவால்” (கம்பரா. மூலபல. 135). 2. பேணுகை. “பெட்பின் றீதல் யாம்வேண் டலமே” (புறம். 205). “பெட்ட வாயில்பெற் றிரவுவலி யுறுப்பினும்” (தொல். களவு. 11). 3. அன்பு (சூடா). 4. பாதுகாப்பு. பெட்டார் = 1. நண்பர் (சூடா). 2. விரும்பியவர். “பேணாது பெட்டார்” (குறள். 1178). |