நீறு - நீற்று. நீற்றுதல் = 1. பொடியாக்குதல். 2. சுட்ட சுண்ணாம்புக்கல்லை நீரிற் கலந்து தூள் அல்லது களியாக்குதல். 3. மாழைகளை (உலோகங்களை)ச் சுட்டுச் சுண்ணமாக்குதல். நுறு - நுறுங்கு. நுறுங்குதல் = பொடியாதல். 2. சிதைதல். “நுறுங்கிய யாக்கையோடு” (விநாயகபு. 80 442). நுறுங்கு = குறுநொய். “நொய்யும் நுறுங்குங் களைந்து அரிசியமைத்தாரை” (தொல். சொல். 1, உரை). ம. நுறுஙு. நுறுங்கு - நறுங்கு. நறுங்குதல் = 1. நொறுங்குதல். 2. தேய்கடையாதல். 3. வளர்ச்சி குறைதல். அவன் நறுங்கிப் போய்விட்டான் (உ.வ.). க. நலுகு (g). நறுங்கு - நறுக்கு. நறுக்குதல் = 1. நொறுக்குதல். 2. துண்டித்தல். உன்னைக் கண்டங் கண்டமாய் நறுக்குகிறேன், பார் (உ.வ.). 3. வெட்டுதல். “கைக் கத்திரிகையிட்டு நறுக்கின தலையாட்டத்தினை” (பு.வெ. 3 10, உரை). 4. கொட்டத்தை யடக்குதல். ம. நறுக்குக, தெ. நருக்கு, க.நரக்கு. நறுக்கு = 1. துண்டு. 2. ஓலைச்சீட்டு. 3. இசைக்குழல் (நாதசுர) நாக்கு. நுறு - நொறு - நொறுங்கு. நொறுங்குதல் = 1. பொடியாதல். 2. மனம் நொறுங்குதல் போல் வருந்துதல். மனம் நொறுங்குண்டது (உ.வ.). நொறுங்கு = 1. நொய் (சூடா.). 2. தூள். “நொறுங்காய்க் கூடி யிட்டன கொடுமுடித் துறுகற்கள்” (சூளா. சீய. 145). 3. நுண்மை (W.). நொறுங்கு - நொறுக்கு. நொறுக்குதல் = 1. பொடியாக்குதல். 2. மென்று தின்னுதல். 3. நையப் புடைத்தல். “வீரரை நொறுக்கி” (திருப்பு. 574). க. நுர்கு (g). நொறுக்கரிசி = 1. குத்தும்போது நொறுங்கிய அரிசி. 2. அரைவேக்காட்டுச் சோறு. நொறுக்கல் நெல் = 1. அறுப்புக் காலத்தில் மழையாற் பதத்த நெல். நொறு - நொறுவை = பல்லால் நொறுக்கித் தின்னும் சிற்றுண்டி, சிற்றுண்டி. |