பெண்மகன் என்னும் மாறோக்கத்தார் வழக்கு, பெட்டைப் பசன் என்னும் ஆம்பூர் வட்டத்தார் வழக்குப் போன்றது. மாறோக்கம் (மாறோகம்) கொற்கை சூழ்ந்த நாடு. பெண் வாயன் = பெண்டிர்போற் சளசளவென்று பேசுபவன். பெண்பாலரையும் மனைவியையும் பெண்சாதி என்பது இரு பிறப்பி (hybrid) என்னும் இழிவழக்கு. இதில், நிலைச்சொல் தமிழ்; வருஞ்சொல் வடமொழி. பெண்சாதி = 1. பெண்பாலார். “உலகத்துப் பெண்சாதி விருப்பமுற்ற மான்பிணைபோலும் நோக்கினையுடைய மகளிர்” (மதுரைக். 555, உரை). 2. மனைவி. “உன்தன் வீட்டுப் பெண்சாதிக்காக” (இராமநா. அயோத். 8). தேவமொழியெனத் தவறாகவும் பேதைத்தனமாகவும் நம்பப்படும் வடசொல், பெண்சாதி என்னும் வழக்கில் இழிவடைந்திருப்பது வியப்பிற்கிடமானதே. பெண் - பெண்டு = 1. பெண்பாலள். “ஒரு பெண்டாலிதய முருகினையாயின்” (வெங்கைக்கோ. 47). 2. “வனைநல முடையளோ மகிழ்நநின் பெண்டே” (ஐங். 57). ம. பெண்டி, க. பெண்ட, ஹெண்ட, தெ. பெண்ட்டி. பெண்டு - பெண்டன் = பேடி (திவா.). க. ஹெண்ணுக. பெண்டாளன் = பெண்டை மனைவியாகக் கொண்டவன் அல்லது நுகர்பவன். பெண்டாட்டி = 1. பெண். “ஒரு பெண்டாட்டி தமரொடு கலாய்த்து” (இறை. கள. 1, உரை). 2. மனைவி. “கொண்டான் குறிப்பறிவாள் பெண்டாட்டி” (திரிகடு. 96). 3. வேலைக்காரி (S.I.I. II, 483). க. ஹெண்டத்தி. பெள் - பேள் - பேட்பு = விருப்பு. பேள் - பேண். பேணுதல் = 1. விரும்புதல். “பேணான் வெகுளி” (குறள். 526). 2. போற்றுதல். “தந்தைதாய்ப் பேண்” (ஆத்தி. 20). 3. பாதுகாத்தல். “பேணித் தென்புல வாழ்நர்க் கருங்கட னிறுக்கும்” (புறம். 9). 4. மதித்தல். “தெய்வம் பேணித் திசைதொழு தனிர் சென்மின்” (பரிபா. 15 48). 5. மதிப்புரவாக நடத்துதல். |