பக்கம் எண் :

வேர்ச்சொற் கட்டுரைகள்

11

புல்5 (வளைதற் கருத்துவேர்)

புல் - புர் - புரள். புரளுதல் = 1. உருளுதல். அடித்துப் புரண்டு விழுந்தான், கழுதை புரண்ட களமாய்ப் போய்விட்டது (உ.வ.). 2. சுற்றுதல் (W.). 3. அலைமறிதல். “புரணெடுந் திரைகளம்” (கம்பரா. விபீடண. 27). 4. கரை கடந்தோடுதல். ஆறு கரை புரண்டோடுகிறது (உ.வ.). 5. மாறி மாறி வருதல். “வெயில்களும் நிலாக்களும் புரள” (கம்பரா. பிரமா. 99). 6. மாறுபாடடைதல். 7. சொற்பிறழ்தல். 8. சாதல். “கழுத்திலே புண்ணாகிப் புழுத்துப் புரண்டான்” (குருபரம். 165. ஆறா.). 9. பணம் விரைந்து தொகுதல் அல்லது கைமாறுதல்.

ம. புரளுக, க. பொரள், தெ. பெரலு.

புரள் - புரளி = 1. பொய். 2. வஞ்சனை. 3. குறும்பு (W.). 4. கலகம் (W.).

புரள் - புரண்டை - பிரண்டை = திருகலான கொடிவகை.

. பிரண்ட.

புரள் - புரட்டு. புரட்டுதல் = 1. உருட்டுதல். “முடையுடைக் கருந்தலை புரட்டு முன்றா ளுகிருடை யடிய” (பட்டினப். 230). 2. கீழ்மேலாகத் திருப்புதல். 3. கறி முதலியவற்றைக் கிண்டி வதக்குதல். கறியைப் புரட்டு, கத்தரிக்காயைப் புரட்டியிருந்தது (உ.வ.). 4. உண்டபின் வயிற்றிற் கோளாறு நேர்தல். வயிற்றைப் புரட்டுகிறது (உ.வ.) 5. சொற்பொருள் திரித்தல். 6. வஞ்சித்தல் (W.). 7. நிலத்திற் படிவித்து அழுக்காக்குதல். புதுச் சேலையைக் கீழும் மேலுமாகப் புரட்டுகிறாள் (உ.வ.).

. புரட்டுக, . பொரள்சு.

புரட்டு - புரட்டல் = குழம்புங் கூட்டுமின்றிக் கட்டியாகச் சமைத்த கறிவகை.