புரட்டு = 1. கீழ்மேலாகத் திருப்புக. 2. சொற்பொருள் திரிப்பு. “புறப்பட்டார் புரட்டுப் பேசி” (திருவாலவா. 38 14). 3. வஞ்சகம். 4. குமட்டல். 5. வயிற்றுவலி. 6. கறிச் சமையல் வகை. புரட்டன் = 1. சொற்பொருள் திரிப்போன். 2. மாறாட்டக்காரன். புரட்டு - புரட்டி = 1. தோசை திருப்பி. 2. புரட்டன். புரள் - புரட்சி = 1. பெருங்கலகம். 2. அரசியல்வகை மாற்றம். எ-டு: இரசியப் புரட்சி. 3. மக்கள் வாழ்க்கை முறை (தொழில், மதம், மொழி, கல்வி, ஊண், உடை முதலியவற்றின்) மாற்றம். 4. பிறழ்வு. புரள் - பிறழ். பிறழ்தல் = 1. மாறுதல். “சிறுகா பெருகாமுறை பிறழ்ந்து வாரா” (நாலடி. 110). 2. முறை கெடுதல். “களிற்றுகிர்ப் பிறழ்பற் பேய்கள்” (சீவக. 804). 3. மாறுபட்டுக் கிடத்தல். “மயிலெருத்துற ழணிமணி நிலத்துப் பிறழ” (கலித். 103). 4. பெயர்தல் (அக. நி.). 5. புடைபெயர்தல். “மாணெழி லுண்கண் பிறழுங் கயலாக” (கலித். 98). 6. நெளிதல். “வயலாரல் பிறழ்நவும்” (பதிற். 13 7. வெட்டி வெட்டி விளங்குதல். “ஒளி பிறழு நெடுஞ்சடை” (கல்லா. 54 11). 8. முரிதல். “திரைபிறழிய விரும்பௌவத்து” (பொருந. 178). 9. திகைத்தல். “பிறங்க லிடையிடைப் புக்குப் பிறழ்ந்து” (பரிபா. 19 10. நடுங்குதல் (சூடா.). 11. சொன்மாறுதல். 12. இறந்துபடுதல். “பிணிபுநீ விடல்சூழிற் பிறழ்தரு மிவளென” (கலித். 3). புரள் - பிரள் - பிரளி (பிறளி) = குழந்தை நோய்வகை. புர் - புரி. புரிதல் = 1. வளைதல். 2. திரும்புதல். “மற்றை யருகே புரியில்” (திவ். இயற். திருவிருத். 42. வியா. ப. 247). 3. முறுக்குக் கொள்ளுதல். “சுகிர்புரி நரம்பின்” (மலைபடு. 23). 4. அசைதல். “தார்புரிந் தன்ன” (பதிற். 66 புரி = 1. முறுக்கு. “புரியடங்கு நரம்பு” (சிறுபாண். 34). 2. சுருள். “புரிக்குழன் மடந்தை” (சீவக. 2688). 3. சுரி (spiral screw). 4. யாழ் நரம்பு. “புரிவளர் குழலொடு” (சீவக. 124). 5. கயிறு, “மரற்புரி நரம்பின்” (பெரும்பாண். 181). 6. சங்கு. “புரியொருகை பற்றி” (திவ். இயற். 1 31). 7. மாலை. “புரிமணி சுமந்த பொற்பூண்” (சீவக. 619). 8. கட்டு (சூடா.). 9. வளைந்த மதில். 10. மதில் சூழ்ந்த நகரம் (பிங்.). ம., க., து. புரி. புரிக்கூடு = வைக்கோற் புரி. நெற்கூடு. “புரிக்கூட்டில் நின்ற .......... பல வருக்கத்து நெல்லு” (சிலப். 10 123, உரை). |