பக்கம் எண் :

முதற்றாய்மொழி அல்லது தமிழாக்க விளக்கம்

(உந்து-உந்தி = தள்ளித் தள்ளிப் பறக்கும் தட்டான்.)

ஊங்குதல் = ஊஞ்சலாடுதல். ஊக்குதல் = ஊஞ்சலாட்டுதல்.

கொழித்தல் = முன் தள்ளுதல், புடைப்பவள் கூலத்தோடு கலந் துள்ள மண்ணையும், நீரலை அடிமண்ணையும் முன் தள்ளுதல் கொழித்தல் எனப்படும்.

சுண்டுதல் = விரலால் முன் தள்ளுதல் அல்லது தெறித்தல்.

(துள்) - தள். தள்ளுதல் என்னும் வினை முதலாவது முன் தள்ளுதலையே குறித்தது.

தூண்டுதல்=விளக்குத் திரியை முன்தள்ளுதல், ஊர்தி விலங்கை முற்செலுத்துதல், ஏவலனை முன் தள்ளுவதுபோல் ஒரு வினைமேல் ஏவுதல்.

தூண்டு-தீண்டு. தூண்டாவிளக்கு தீண்டாவிளக்கு எனப்படுதல் காண்க.

நுந்துதல்=திரியைத் தூண்டுதல். நுந்து-நொந்து. நுந்தாவிளக்கு நொந்தாவிளக்கு எனவும் படும்.

நூங்கு-நூக்கு. நூக்குதல் = முன்தள்ளுதல், தள்ளுதல்.

நூவுதல் = திரியைத் தூண்டுதல், நீரை முன் இறைத்துப் பாய்ச்சு தல்.

நூவு-நீவு. “நீவாத தீபம்” (மஸ்தான். 140)

(நூ)-நீ. நீத்தல்=தள்ளுதல், செலுத்துதல்.

நீயான் = கப்பலோட்டி. நீயான்-நீகான்-மீகான்.

நீகான்-நீகாமன்-மீகாமன்.

(2) நீக்கல்

வேண்டாவென்று தள்ளப்பட்ட பொருள் நீக்கப்பட்டதாதலின், தள்ளற்கருத்து நீக்கற்கருத்தைத் தழுவியதாகும்.

உத்துதல்=கழித்தல், நீக்குதல்.

உத்து-ஒத்து, ஒத்துதல்=தள்ளுதல். ஒத்திவைத்தல்=தள்ளி வைத்தல்.

ஒதுங்குதல்=தானே தள்ளுதல் (த. வி.) ஒதுக்குதல்=ஒரு பொருளைத் தள்ளுதல், ஒரு குறிப்பிட்ட பயனுக்காக ஒன்றைத் தள்ளிவைத்தல். (பி. வி.)