பக்கம் எண் :

பக்கம் எண் :10

8. சமணசமயம் குன்றிய வரலாறு

இந்து மதத்தில் ‘பக்தி’ அல்லது ‘அன்பு’ இயக்கம் தோன்றிய பின்னர், இந்துமதம் சமண மதத்தை எதிர்க்க ஆற்றல் கொண்டது என்று கூறினோம். பக்தி இயக்கம் எவ்வாறு சமணசமயத்தின் செல்வாக்கினை அழிக்க முடிந்தது என்பதைக் கூறுவாம். இச் செய்தியை அறியவேண்டுமானால், முதலில் ‘வீடு’ அல்லது ‘மோட்சம்’ என்னும் உயர்நிலை அடைவதற்கு இவ்விரு சமயத்தவரும் கொண்டுள்ள கொள்கைகள் இன்னவை என்பதை அறியவேண்டும். ஆதலின், வீட்டு நெறியைப் பற்றி இவ்விரு சமயத்தவரின் கருத்து இன்னதென்பதை விளக்குவாம்.

சமண சமயத்தவர் கொள்கை இது: அருகப் பெருமான் விருப்பு வெறுப்பு அற்றவர். தம்மாட்டுப் பக்தி (அன்பு) செய்வோரிடத்தும் செய்யாதவரிடத்தும் உவப்பு வெறுப்பு இன்றி ஒரு தன்மைத்தாக இருக்கின்றார். தம்மை வணங்கித் தம்மாட்டுப் பக்தி செய்வோரின் பாவ புண்ணியங்களைப் போக்கி அவர்களுக்கு வீடு பேறளிப்பது விருப்பு வெறுப்பு அற்றவராகிய அவரது இயல்பு அன்று. மக்கள் வீடுபேறடையும் வழியை அவர் அருளிச் செய்திருக்கின்றார். அந்நெறியைக் கடைப்பிடித் தொழுகி முயற்சி செய்தால் அவரவர் வீடுபேறடையக் கூடும். துறவிகளுக்கே வீடுபேறடைய முடியும். இல்லறத்தாரும் மகளிரும் நல்வினை செய்வாராயின், தெய்வப் பிறவி பெற்றுச் சுவர்க்க பதவி பெற முடியுமேயன்றி வீடுபேறு அடைய முடியாது (சுவேதாம்பர சமணர்களுக்குப் பெண் மகளிரும் வீடுபேறடைய முடியும் என்னும் கொள்கை உண்டு.) சமணசமய நூல்களில் கூறப்பட்ட யதிதருமப்படி ஒழுகினால் துறவிகள் மோட்சமடையப் பெறுவர். அவர்கள் அருகக் கடவுள் மாட்டுச் சரண் அடையவேண்டும். மோட்ச நெறிக்குத் துணையாக நிற்பது அறவொழுக்கம் ஒன்றுதான். இவ்வற வொழுக்கத்தையும் தவத்தையும் துணையாகப் பற்றிக்கொண்டு அவரவர் தமது முயற்சியாலேயே வீட்டுலகைக் கைப்பற்றவேண்டும்.

‘‘கறங்கின் உழலுங் கதிதோறும் துன்பம்
பிறங்கும் பிறப்பஞ்சி வாழ்மின் - சிறந்த
பிறப்பிறப்பு மூப்புப் பிணிகளெனும் துன்பம்
உறுப்புணர யானுழக்குங் காலை - அறத்திறஞ் சேர்ந்(து)
யானாம் ஒருவனே யல்லது எனக்கு மற்(று)
ஏனோர் துணையல்லவர் என்றறிமின்.’’

என்னும் திருக்கலம்பகச் செய்யுளால் இக் கருத்தை நன்கறியலாம். இதனால், அருகக் கடவுள் மாட்டுப் பக்தி செலுத்தினால் மட்டும் வீடுபேறடைய முடியாது என்பதும், சமணசமய நெறியைப் பின்பற்றி ஒழுகி இருவினை யறுத்து வீடுபேறடைய வருந்தி முயற்சி செய்ய வேண்டும் என்பதும் விளங்குகின்றன.

சைவ வைணவராகிய ‘இந்து’க்களின் கொள்கை இது: துறவிகளும் இல்லறத்தாரும், பெண் மகளிரும், மோட்சம் அடையலாம். ‘பக்தி’ மட்டும் இருந்தால் போதும். துறவு பூண்டு தவம் செய்யாமலே ‘பக்தி’ ஒன்றினாலேயே முக்தியடையலாம். ‘பக்தியால் முக்தி எளிதாகும்.’ சிவபெருமான் திருவடி, ‘பரவுவார் பாவம் பறிக்கும் அடி’ எத்தகைய பாதகம் செய்தவராக இருந்தாலும், அவர்கள், கடவுள் மாட்டுப் பக்தி செய்வாராயின் அவர் பாவங்களைக் கடவுள் நீக்கிவிடுவது மட்டும் அன்றி மோட்சமாகிய வீட்டுலகத்தையுங் கொடுக்கின்றார். ஆனால், பக்தி செய்யவேண்டும். பக்தி செய்யாதவருக்கு அவர் அருள் செய்கிறதில்லை. இதுவே இந்து மதத்தின் கொள்கை. இக் கருத்தை இந்துமதப் பெரியார்கள் வெளிப்படையாகக் கூறியிருக்கிறார்கள்.

‘‘திருமறு மார்வ! நின்னைச் சிந்தையுள் திகழ வைத்து
மருவிய மனத்த ராகில் மாநிலத்து உயிர்க ளெல்லாம்
வெருவுறக் கொன்று சுட்டிவிட்டு ஈட்டிய வினையரேனும்
அருவினைப் பயன துய்யார் அரங்கமா நகருள் ளானே.’
(நாலாயிரம், திருமாலை, 39)

‘மறிந்தெழுந்த தெண்திரையுள் மன்னும்மாலை
வாழ்த்தினால்

பறிந்தெழுந்து தீவினைகள் பற்றறுதல் பான்மையே.’

(நாலாயிரம், திருச்சந்த விருத்தம். 74)

‘தூமநல் விரைமலர்கள் துவளற ஆய்ந்து கொண்டு

வாமனன் அடிக்கென்றேத்த மாய்ந்தறும் வினைகள்தாமே’
(நாலாயிரம் திருவாய்மொழி 10, பாட்டு 9)
‘‘வினைவல் இருள்எனும்
முனைகள் வெருவிப்போம்
சுனைகள் மலர்இட்டு
நினைமின் நெடியானே.’’
(நாலாயிரம் 5, திருவாய்மொழி, 10)

‘ஓது வேதிய னார்திரு வொற்றியூர்
பாத மேத்தப் பறையும்நம் பாவமே.’ (தேவாரம் - அப்பர்)

‘உரைசெய் நூல்வழி யொண்மலர் இட்டிடத்
திரைகள் போல்வரு வல்வினை தீர்ப்பரால்.’
(தேவாரம் - அப்பர்)
‘கச்சிளவர வசைத்தீர் உமைக் காண்பவர்
அச்சமோ டருவினை யிலரே.’ (தேவாரம் - சம்பந்தர்)

‘தாழ்சடை முடியீர் உமைக் காண்பவர்
ஆழ்துயர் அருவினை யிலரே.’ (தேவாரம் - சம்பந்தர்)

‘பிண்டம் அறுப்பீர்காள்!
அண்டன் ஆரூரரைக்
கண்டு மலர் தூவ
விண்டு வினை போமே.’ (தேவாரம் - சம்பந்தர்)

இதுபோன்று மேற்கோள்களை ஏராளமாகக் காட்டலாம். விரிவஞ்சி விடுகின்றோம். இதனால் சைவ வைணவராகிய ‘இந்து’க்களுக்குப் பக்தி ஒன்றினாலேயே மோட்சம் பெற இயலும் என்னும் கொள்கை உண்டு என்பது உள்ளங்கை நெல்லிக்கனி என அறியப்படும். அன்றியும் இல்லறத்தார்க்குச் சுவர்க்க பதவி தவிர வீடுபேறு கிடையாது; துறவறத்தார்க்கே வீடுபேறு உண்டு என்னும் சமண சமயக் கொள்கையை மறுத்து, இல்லறத்தாருக்கும் வீடுபேறு உண்டு என்னும் இந்துமதக் கொள்கையைத் திருஞானசம்பந்தர் வற்புறுத்திக் கூறியுள்ளார்.

‘பிறவியால் வருவன கேடுள ஆதலாற் பெரிய இன்பத்
துறவியார்க் கல்லது துன்பம் நீங்காதெனத் தூங்கினாயே!
மறவல்நீ; மார்க்கமே நண்ணினாய்; தீர்த்தநீர் மல்கு சென்னி
அறவனார் ஆரூர் தொழுதுய்யலாம் மையல்
கொண்டஞ்சல் நெஞ்சே.’
‘தந்தை தாய், தன்னுடன் தோன்றினார், புத்திரர்,
தாரம் என்னும்
பந்தம் நீங்காதவர்க்கு உய்ந்து போக்கில் எனப் பற்றினாயே!
வெந்த நீறாடியார் ஆதியார் சோதியார் வேதகீதர்
எந்தை ஆரூர்தொழுது உய்யலாம் மையல்கொண்டஞ்சல்
நெஞ்சே’ (சம்பந்தர்-2 திருவாரூர்.)

இவ்வாறு, துறவறத்தாரும் இல்லறத்தாரும் ஆண்பாலரும் பெண் பாலரும் கடவுள் மாட்டுப் பக்தி மட்டும் செய்வாராயின் அவர்களுக்கு மோட்சம் உண்டு என்று இந்துமதம் பறை சாற்றியது. இவ்வளவு எளிய முறையில் யாதொரு வருத்தமுமின்றி வீட்டுலகத்திற்குச் செல்ல வழியைக் காட்டினால் அதனை மக்கள் விரும்பாதொழிவரோ? புதிய இந்து மதம், ‘பக்தியால் முத்தி எளிதாகும்’ என்னும் எளிய வழியைக் காட்டிச் செல்வாக்குப் பெற்றது. எளிய வழியைக் காணப்பெற்ற மக்கள், இதற்கு மாறாக உள்ள, மனைவி மக்களை வீட்டு, உலக இன்பங்களைத் துறந்து ஐம்புலன்களையும் அடக்கிக் கடுந்தவம் புரிந்து இருவினையுங் கெடுத்து ஞான வீரனாய் வீட்டுலகத்தை வெற்றியோடு கைக்கொள்ளும் சமண மோட்ச வழியைப் பின்பற்றுவரோ? ஆகவே, உலகம் ‘பக்தி’ செய்து ‘முக்தி’ பெற இந்துமதத்தைப் பின்பற்றத் தொடங்கியது. ஆகவே இந்துமதத்தின் பக்தி இயக்கம் சமண சமயத்தின் செல்வாக்கைப் பெரிதும் குறைத்துவிட்டது என்று துணிந்து கூறலாம்.

ஆனால், இந்து மதத்தின் பக்தி இயக்கம் ஒன்றினாலேயே சமணசமயம் தனது முழுச் செல்வாக்கையும் இழந்துவிட்டதாகக் கருதவேண்டா, சமணசமயத்தின் செல்வாக்கை யழிக்க இந்துமதத்தார் வேறு முறைகளையும் கையாண்டனர். அறநெறி அல்லாத மறநெறிகளையும், செம்மை முறைக்கு மாறுபட்ட முறைகளையும், கொடுஞ் செயல்களையும், சூழ்ச்சிகளையும் செய்தபடியினாலே சமண சமயம் முழுவதும் செல்வாக்கு இழந்துவிட்டது. இதற்குச் சான்றுகள் உள்ளன.

பக்தியிக்கம் இந்து மதத்தில் தோன்றிய பிறகு, இந்துக்களாகிய சைவ வைணவர் சமணரைக் கடுமையாகத் தாக்கினார்கள். இதனால் சமயப் பகை மேன்மேலும் காழ்ப்புக் கொண்டது. சமணர்மேல் வசை மொழிகளையும் இழிசொற்களையும் இந்துக்கள் அர்ச்சனை செய்தபடியினாலே சமணர்களுக்கு இவர்கள்மேல் சீற்றம் வருவது இயல்புதான். ஆகவே, சமணர் சைவ வைணவக் கோயில்களைக் காண்பதும், சைவ வைணவக் கடவுள்களைப் பற்றிக் கேட்பதும் ‘‘பாவம்’’ என்று கருதினார்கள். இதனைச் சமணர் ‘‘கண்டு முட்டு, கேட்டு முட்டு’’ என்பர்.

‘‘நீற்று மேனிய ராயினார் மேலுற்ற
காற்றுக் கொள்ளவு நில்லா வமணர்’’

என்று திருஞானசம்பந்தர் திருவாலவாய்ப் பதிகத்தில் கூறுவது காண்க. இவ்வாறு சமயப்பகை முற்றிக் காழ்ப்புக் கொண்டது. இந்தக் காலத்தில்தான் சைவ வைணவ ஆழ்வார்கள் தோன்றி நாடெங்கும் சுற்றுப் பிரயாணம் செய்து சைவ வைணவ சமயத்துக்கு ஆக்கம்தேட முயன்றார்கள். அவரவர் சமயத்தை அவரவர் பிரசாரம் செய்வது தவறன்று. ஆனால், மற்றவர் சமயத்தைக் குறை கூறுவதும் மற்றச் சமயத்தவருக்கு இடையூறுகளும் துன்பங்களும் உண்டாக்குவதும் கலகத்துக்கும் பகைமைக்கும் காரணமாகும். ஆகவே சமயப் போராட்டங்களும் கலகங்களும் நடைபெற்றன. இந்தச் சமயப் போராட்டம் மும்முரமாக நடைபெற்ற காலம் கி.பி. 7,8,9 ஆம் நூற்றாண்டுகளாகும்.

தேவாரப் பாடல்பெற்ற திருப்பதிகளின் சரித்திரத்தை ஆராய்ந்து பார்த்தால் அப்பதிகளில் அக்காலத்தில் பௌத்தரும் சமணரும் குடியிருந்ததையும் பௌத்த சமணப் பள்ளிகளும் அங்கிருந்ததையும் அறியலாம். அக்கோயில்கள் பிற்காலத்தில் அழிந்து மறைந்துவிட்டன.

கி.பி. 7,8,9 ஆம் நூற்றாண்டுகளில் சமயப்போர் தமிழ் நாட்டில் மும்முரமாக நடைபெற்றது என்று கூறினோம். அந்தச் சமயப் போர் முக்கியமாக மூன்று மதங்களில் நிகழ்ந்தது. ‘‘இந்து’’ மதத்துக்கும் சமணசமயத்துக்கும், இந்து மதத்துக்கும் பௌத்த மதத்துக்கும், பௌத்த சமயத்துக்கும் சமண சமயத்துக்கும் ஆக மும்முனைப் போர் ஆக நடைபெற்றது. இந்துக்கள் சமணரையும் பௌத்தரையும் தாக்கினார்கள். சமணர் இந்துக்களையும் பௌத்தர்களையும் தாக்கினார்கள். பௌத்தர் இந்துக்களையும் சமணர்களையும் தாக்கினார்கள். இவ்வாறு ஒரே காலத்தில் மும்முனைப்போர் நடந்தது. இந்தப் போரில் இந்து மதம் பௌத்த மதத்தை எவ்வாறு அழித்தது என்பதை எமது ‘‘பௌத்தமும் தமிழும்’’ என்னும் நூலில் கூறியிருக்கிறோம். இங்கு ‘‘இந்து’’ மதம் சமண மதத்தை எவ்வாறு அழித்தது என்பதை ஆராய்வோம்.

இந்தச் சமயப்போர் நடந்த காலத்திலே இந்துமதம் சைவம் வைணவம் இரண்டு என்னும் இரண்டு பிரிவுகளைக் கொண்டிருந்த போதிலும், பிற்காலத்தில் ஏற்பட்டதுபோல் பெரிய பிளவு ஏற்பட்டுச் சைவ வைணவப்போர் நிகழ்ந்தது போல அல்லாமல் இரண்டு மதங்களும் ஒற்றுமையாக இருந்து சமணசமயத்தையும் பௌத்த மதத்தையும் கடுமையாகத் தாக்கின. (பிற்காலத்தில் மும்முரமாக நடந்த சைவ வைணவப் போராட்டம், பௌத்த சமண சமயங்கள் பெரிதும் ஒடுங்கிப்போன காலத்தில் நடந்தது.)

சமணசமயம் பலவிதத்தில் தாக்கப்பட்டது. கொடுமைப்படுத்தல், கழுவேற்றுதல், கொலை செய்தல், கலகம் விளைவித்தல், நிலபுலங்களைக் கவர்தல் முதலிய செயல்கள் நிகழ்ந்தவரைக் காண்கிறோம். இவ்வாறு இந்துக்கள் சமண மதத்தை அழித்த செய்திகள் பல உள. இவற்றைச் சைவ வைணவ நூல்களில் ஆங்காங்கே காணலாம்.

‘‘வெறுப்பொடு சமணர் முண்டர் விதியில்
சாக்கியர்கள் நின்பால்
பொறுப்பரி யனகள்பேசிப் போவதே நோயதாகிக்
குறிப்பெனக் கடையுமாகில் கூடுமேல் தலையை ஆங்கே

அறுப்பதே கருமங் கண்டாய் அரங்கமா நகருளானே!’’

என்னும் தொண்டரடிப்பொடி ஆழ்வாரின் திருப்பாடல், அக்காலத்துச் சமயப்போர் எவ்வளவு முதிர்ந்து காழ்ப்புக் கொண்டிருந்தது என்பதை விளக்குகின்றது.

திருஞானசம்பந்தர் மதுரையிலே எட்டு ஆயிரம் சமணரைக் கழுவேற்றினார் என்று சைவசமய நூல்களாகிய பெரிய புராணம், திருவிளையாடற் புராணம், தக்கயாகப் பரணி முதலிய நூல்கள் கூறுவதும், இவற்றை நினைவுபடுத்த மதுரைப் பொற்றாமரைக் குளத்து மண்டபத்தின் சுவரில் சமணரைக் கழுவேற்றுங் காட்சியைச் சித்திரந் தீட்டி வைத்திருப்பதும், மதுரைக் கோவிலில் நடைபெற்று வரும் உற்சவங்களில் ஐந்துநாள் கழுவேற்று உற்சவம் ஆண்டுதோறும் நடைபெற்று வருவதும் இவை நடைபெற்றதற்கு முதன்மையான சான்றுகளாகும்.

காஞ்சிபுரத்துக்கடுத்த திருவோத்தூரிலும் இதுபோன்ற கலகம் நடந்திருக்கிறது. அவ்வூரில் ஒரு சைவர் பனை மரங்களை நட்டுவளர்க்க, அம்மரங்கள் வளர்ந்து ஆண் பனையாயிருக்க, அங்கிருந்த சமணர் அதைக்கண்டு ‘இவ்வாண்பனைகள் பெண்பனை ஆகுமோ?’ என்று கேட்டாராம். மதுரைக்குச் சென்று வந்த ஞானசம்பந்தர் இவ்வூருக்கு வந்தபோது இந்தச் சைவர், ஆண்பனைகளைப் பெண் பனைகளாகச் செய்யவேண்டும் என்று வேண்டிக்கொண்டனர். அதற்கு இணங்கி ஞானசம்பந்தர் பதிகம்பாடினார் என்றும், பொழுது விடிந்தவுடன் அப் பனைமரங்கள் ஆணாக இருந்தவை பெண் பனைகளாக மாறிப் பனங்காய்களைக் காய்த்தன என்றும், இதைக் கண்ட சமணர் அந்த ஊரைவிட்டு ‘ஓடி’ விட்டனர் என்றும், பெரியபுராணம் கூறுகிறது. இதற்குச் சான்றாக அந்தத் திருவோத்தூர்ச் சிவன் கோயிலில் சமணரைக் கழுவேற்றுதல் போன்ற சிற்ப உருவங்களை அமைத்து வைத்திருக்கிறார்கள். இவ்விதக் கலகமும் கழுவேற்றுதலும் அவ்வூரில் நிகழாமலிருந்தால், இவ்விதமான சிற்பங்கள் அங்கு அமைக்க வேண்டிய காரணமில்லை. திருவோத்தூர்க் கலகமும் கழுவேற்றுதலும், ஞானசம்பந்தர் மதுரைக்குச் சென்று அங்குச் சமணரை வென்ற பின்னர் நிகழ்ந்தவை.

இதுபோன்ற மற்றொரு கலகம், சோழ நாட்டிலே பழையாறை என்னும் இடத்திலே அப்பர் சுவாமிகள் சென்றபோது நடைபெற்றதாகத் திருத்தொண்டர் புராணத்தில் சேக்கிழார் கூறுகிறார். சமணர், பழையாறை வடதளியில் இருந்த சிவன் கோயிலைக் கைப்பற்றியிருந்தனர். இதனையறிந்த அப்பர் சுவாமிகள், அக்கோயிலை மீண்டும் சைவக் கோயிலாக்க எண்ணினார். அக்கோயிலில் இருக்கும் சிவபெருமான் திருவுருவத்தைக் கண்டு வணங்காமல் உணவுகொள்ளமாட்டேன் என்று சூளுரைத்து உணவுகொள்ளாமல் இருந்தார். அப்போது சிவபெருமான், அரசனுடைய கனவிலே தோன்றிச் சமணரை ஆழிக்கும்படி கட்டளையிட்டாராம். அரசன் யானைகளைச் சமணர் மேல் ஏவி அவர்களைக் கொன்றான்.

அப்பர் சம்பந்தர் காலத்துக்குச் சற்று முன்னர், திருவாரூரிலும் இத்தகைய சைவ - சமணர் கலகம் ஏற்பட்டுச் சமணர் துன்புறுத்தப்பட்டுத் துரத்தப்பட்டதோடு, அவருடைய நிலங்களும், மடங்களும், பள்ளிகளும், பாழிகளும அழிக்கப்பட்டன. இந்தச் செய்தியையும் பெரிய புராணம் கூறுகிறது.

இப்போது திருவாரூர்த் திருக்குளம் மிகப் பெரியதாகவும் பதினெட்டு ஏக்கர் நிலப்பரப்பைக் கொண்டதாகவும் இருக்கிறது. இத்துணைப் பெரிய குளம் தமிழ் நாட்டிலே வேறு எங்கும் கிடையாது என்று கூறப்படுகிறது. ஆனால், தண்டியடிகள் நாயனார் என்னும் சைவ அடியார் இருந்த காலத்திலே - அந்தக் காலத்தில் திருவாரூரில் சமணர் செல்வாக்குடனும் ஆதிக்கத்துடனும் வாழ்ந்திருந்தனர்-; இந்தக் குளம் மிகச் சிறியதாக இருந்தது. அந்தச் சிறு குளத்தின் நான்கு கரைகளிலும் சமண சமயத்தவருடைய நிலங்களும் மடங்களும், பள்ளிகளும் பாழிகளும் இருந்தன. அப்போது, அந்தச் சிறிய குளத்தைப் பெரிய குளமாகத் தோண்டவேண்டுமென்று தண்டியடிகள் என்னும் சைவ நாயனார் முயற்சி செய்தார். இந்தச் செய்தியைப் பெரியபுராணம் கூறுகிறது.

‘‘செங்கண் விடையார் திருக்கோயில்
குடபால் தீர்த்தக் குளத்தின் பாங்கு
எங்கும் அமணர் பாழிகளாய்
இடத்தால் குறைபா டெய்துதலால்
அங்கந் நிலைமை தனைத்தண்டி
யடிகள் அறிந்தே ஆதரவால்
இங்கு நானிக் குளம்பெருகக்
கல்ல வேண்டும் என்றெழுந்தார்.’’
21

குளமோ மிகச் சிறியது. குளத்தின் கரைகளிலே சமணருடைய நிலங்களும் கட்டிடங்களும் உள்ளன. குளத்தைப் பெரியதாகத் தோண்ட வேண்டுமானால், குளக்கரையைச் சூழ்ந்திருந்த சமணருடைய நிலங்களையும் கட்டிடங்களையும் இடித்துத் தகர்க்கவேண்டும். தண்டியடிகள், சமணருடைய நிலங்களையும் கட்டிடங்களையும் விலை கொடுத்து வாங்கியபிறகு குளத்தைப் பெரியதாகத் தோண்டவில்லை. குளத்தைப் பெரியதாகத் தோண்டுகிறார். அப்போது சமணர், தங்கள் நிலங்களும் கட்டிடங்களும் தோண்டப்பட்டு இடிக்கப்படுவதைப் பார்த்துக் கொண்டு சும்மா இருப்பார்களா? அவர்கள் தடுக்கிறார்கள்; வழக்கம்போலக் கலகம் ஏற்படுகிறது. சேக்கிழார் வாக்குப்படி, ‘‘தண்டியடிகளால் அமணர் கலக்கம் விளைந்தது’’ கலக்கம் மட்டும் நிகழவில்லை; கலகமும் நடந்தது. ஏனென்றால், சிவபெருமான் அரசன் கனவில் தோன்றிச் சமணரை அழிக்கச் சொல்கிறார். அரசன், சமணரை ஊரைவிட்டுச் துரத்திய பின்னர், அவர்களுடைய கட்டிடங்களையும் நிலங்களையும் அழித்துப் பறித்து அந்தச் சிறிய குளத்தை இப்போதுள்ள பெரிய குளமாகத் தோண்டினான். இதனைப் பெரியபுராணம் இவ்வாறு கூறுகிறது.

‘‘அன்ன வண்ணம் ஆரூரில்
அமணர் கலக்கம் கண்டவர்தாம்
சொன்ன வண்ண மே அவரை
ஓடத் தொடர்ந்து துரந்ததற்பின்
பன்னும் பாழிப் பள்ளிகளும்
பறித்துக் குளஞ்சூழ் கரைபடுத்து
மன்ன னவனும் மனமகிழ்ந்து
வந்து தொண்டர் அடிபணிந்தான்.’’
22

இவ்வாறெல்லாம் சமணர்களைக் கழுவேற்றுதல், யானைகளால் மிதிப்பித்தல், ஊரைவிட்டுத் துரத்துதல், நிலபுலங்களைக் கவர்தல் முதலிய கலகங்களும் கொடுமைகளும் சச்சரவுகளும் போராட்டாங்களும் நிகழ்ந்துவந்தன. சமயப்போர் - இல்லை, சமய வெறி - எல்லா நாட்டிலும் பெருந் தீங்கு செய்துள்ளது.

கிறித்துவர்களை உரோமர்கள் செய்த கொடுமைகளும், முஸ்லிம்- கிறிஸ்துவ மதப் போர்களும், செய்துள்ள துன்பங்களும் கொடுமைகளும் சொல்லி முடியா. இவ்வாறே, நமது நாட்டிலும் சமய வெறியர்கள் நிகழ்த்திய கொடுஞ் செயல்கள் கணக்கில. இவ்வாறெல்லாம் துன்பங்களும் கொடுமைகளும் நிகழ்ந்தபடியி னாலே நாளடைவில், சமணசமயம் செல்வாக்கிழந்து நிலை குன்றியது. துன்பங்களைப் பொறுக்க முடியாத சமணர்களில் பெரும் பான்மையோர் மதம் மாறினார்கள். அஃதாவது சமண சமயத்தை விட்டுச் சைவர்களாகவும் வைணவர்களாகவும் மாறிவிட்டார்கள்.

சைவ வைணவராகிய இந்துக்கள் எல்லாப் பழியையும் சமணர்மேல் சுமத்தினார்கள் என்பது, ‘‘போம் பழியெல்லாம் அமணர் தலையோடே’’ என்னும் பழமொழியினால் அறியலாம். வைணவராகிய திருவாய்மொழி விளக்க உரைகாரர், இந்தப் பழமொழியை விளக்க ஒரு கதை எழுதுகிறார். அந்தக் கதை இது:

‘‘ஒரு கள்ளன் ஒரு பிராமணக் கிருஹகத்திலே கன்னமிட, அது ஈரச்சுவராகையாலே இருத்திக்கொண்டு மரிக்க, அவ்வளவில் அவன் பந்துக்கள் வந்து பிராமணனைப் பழிதரவேணுமென்ன, இரண்டு திறத்தாரும் ராஜாவின் பாடேபோக, அந்த ராஜாவும் அவிவேகியாய் மூர்க்கனுமாகையாலே, ‘ப்ராஹ்மணா! நீரீரச்சுவரை வைக்கையாலே யன்றோ அவன் மரித்தான். ஆகையாலே நீ பழி கொடுக்கவேணும்’ என்ன, அவன் ‘எனக்குத் தெரியாது. சுவரை வைத்த கூலியாளைக் கேட்கவேணும்’ என்ன, அவனை அழைத்து, ‘நீயன்றோ ஈரச்சுவர் வைத்தாய்; நீ பழி கொடுக்கவேணும்’ என்ன, அவனும் ‘தண்ணீரை விடுகிறவள் போரவிட்டாள்; என்னாற் செய்யவாவது என்?’ என்ன, அவளை அழைத்துக் கேட்க, அவளும் ‘குசவன் பெரும்பானையைத் தந்தான்; அதனாலே நீர் ஏறிற்று’ என்ன, அவனை அழைத்துக் கேட்க, அவனும் ‘என்னால் வந்ததன்று; ஒரு வேஸ்யை போகவரத் திரிந்தாள்; அவளைப் பார்க்கவே பானை பெருத்தது’ என்ன, அவளையழைத்துக் கேட்க, அவளும் ‘என்னால் அன்று; வண்ணான் புடவை தராமையாலே போகவரத் திரிந்தேன்’ என்ன, அவனை யழைத்துக் கேட்க, அவனும் ‘என்னால் அன்று; துறையில் கல்லிலே ஓரமணன் வந்திருந்தான்; அவன் போகவிட்டுத் தப்பவேண்டியதாயிற்று’ என்ன, அந்த அமணனைத் தேடிப்பிடித்துக் கொண்டு வந்து, ‘நீயன்றோ இத்தனையும் செய்தாய்; நீ பழிகொடுக்க வேணும்’ என்ன, அவனும் மௌனியாகையாலே பேசாதிருக்க என்ன, ‘உண்மைக்குத்தரமில்லை என்றிருக்கிறான்; இவனே எல்லாம் செய்தான்’ என்று ராஜா அவன் தலையை யரிந்தான்.’’

இது கட்டுக் கதையே, ஆனாலும், மற்றச் சமயத்தார் சமணர்மேல் பழி சுமத்தினார்கள் என்பதற்கு இது ஓர் உதாரணம் ஆகும். சோழருடைய தலைநகரமாகிய உறையூர் மண்மாரி பெய்து அழிந்துபோனபோது, அதனைச் சமணர் தமது மந்திர சக்தியினால் அழித்தார்கள் என்று அவர்கள்மீது பழி சுமத்தியதையும் மற்றும் அபவாதங்களையும் இந்நூலில் மற்றோர் இடத்தில் காண்க.

சுமார் ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்னே செஞ்சி வட்டாரத்தில் நடைபெற்ற ஒரு செய்தியைக் கூறி இதனை முடிப்போம். கி.பி. 1478 இல் செஞ்சிப் பிரதேசத்தை அரசாண்டவன் வெங்கடபதி நாயகன் என்பவன். இவனுக்குத் ‘துமால் கிருஷ்ணப்ப நாயகன்’ என்னும் பெயர் உண்டு. இவன் விஜயநகர மன்னருக்கு உட்பட்ட தெலுங்கு இனத்தவன். இவன், உயர்ந்த குலத்தவரான ஒவ்வொரு இனத்திலும் ஒவ்வொரு மனைவியை மணக்கவேண்டும் என்று எண்ணங் கொண்டு, முதலில் உயர்ந்த குலத்தவரான பிராமணர்களை அழைத்து, தனக்கு ஒரு பிராமணப் பெண்ணை மனைவியாகத் தரவேண்டும் என்று கேட்டான். தங்களை விடத் தாழ்ந்த இனத்தவனாகிய இவனுக்குப் பெண் கொடுக்கப் பிராமணர் இசையவில்லை. மறுத்துக்கூறவும் முடியவில்லை. ஏனென்றால் இவன் நியாய அநியாயம் அறியாத மூர்க்கன். ஆகவே, பிராமணர்கள் இந்தத் தர்ம சங்கடத்திலிருந்து தப்பித்துக்கொள்ளவும், சமணர்களைச் சங்கடத்துக்குள்ளாக்கி விடவும் யோசனை செய்து, அரசனிடம் சென்று, ‘‘சமணர்கள் பிராமணர்களைவிட உயர்ந்த இனம் என்று சொல்லிக்கொள்கிறார்கள். ஆகவே, முதலில் அவர்கள் பெண் கொடுத்தால் பிறகு எங்கள் இனத்தில் பெண் கொடுக்கிறோம்,’’ என்று கூறினார்கள். அரசன் சமணரை அழைத்துத் தனக்கு ஒருத்தியை மனைவியாகக் கொடுக்கவேண்டும் என்று கேட்டான். தாழ்ந்த இனத்தானாகிய இவனுக்குச் சமணர் பெண் கொடுக்க விரும்பவில்லை. ஆனால், மூர்க்கனாகிய இவனிடம் மறுத்துக் கூறினால் துன்பம் செய்வான் என்று அஞ்சினார்கள். கடைசியாக அவர்கள் ஒன்று சேர்ந்து ஒரு முடிவுக்கு வந்தார்கள். சமணப் பிரபு ஒருவரின் வீட்டைக் குறிப்பிட்டு அந்த வீட்டுக்குக் குறிப்பிட்ட ஒரு நாளில் அரசர் வந்தால் பெண்ணை மணம் செய்துகொண்டு போகலாம் என்று தெரிவித்தார்கள். அரசனும் அவ்வாறே பரிவாரங்களுடன் அந்த வீட்டிற்குக் குறிப்பிட்ட நாளில் வந்தான். ஆனால், அவன் கண்டதென்ன? அவ்வீட்டில் ஒருவரும் இலர். கலியாணப் பந்தல் மட்டும் இருந்தது. பந்தலின் ஒரு காலில் ஒரு பெட்டை நாய் கட்டப்பட்டிருந்தது!

பெண் கொடுப்பதாகத் தெரிவித்த சமணப் பிரபு அந்த ஊரைவிட்டு வேறு நாட்டிற்குப் போய்விட்டார். செஞ்சி மன்னன் தன்னைச் சமணர் அவமானப்படுத்தியதைக் கண்டு கோபம் அடைந்தான். சமணரைக் கொல்லும் படி கட்டளையிட்டான். சேவகர் செஞ்சி நாட்டிலிருந்தே சமணரைக் கொன்றனர். இதைச் சுமந்தான் தலைபத்து என்று கூறுவார்கள். இந்த அநியாயத்தைக் கண்ட சமணர் பலர் வேறு நாட்டிற்கு ஓடிவிட்டார்கள். பலர் பூணூலை அறுத்துப் போட்டுச் சைவசமயத்தில் சேர்ந்து விபூதி பூசிக்கொண்டார்கள்; (இவர்கள் நீறுபூசி வேளாளர் என்று கூறப்பட்டனர்.) பெண் கொடுப்பதாகச் சொல்லி வேறு நாட்டிற்குச் சென்ற சமணப் பிரபுவின் சந்ததியார் இப்போதும் சைவசமயத்தவராகவே இருக்கிறார்கள்.

இந்த அரசன் காலத்தில் செஞ்சிக்கு அருகில் உள்ள வேலூர் என்னும் ஊரில் வீரசேனாசாரியார் என்னும் பெயருள்ள சமணர் இருந்தார். அவர் அவ்வூர்க் குளத்தில் சமண சம்பிரதாயப்படி அனுஷ்டானம் செய்துகொண்டிருந்தார். இதனைக் கண்ட அரச சேவகர் அவரைப் பிடித்துக்கொண்டு போய் அரசனிடம் விட்டார்கள்.

அச்சமயம் அரசனுக்கு ஒரு குழந்தை பிறந்திருந்தபடியால் அவன் மகிழ்ச்சியோடிருந்தான். ஆகவே, அவரைக் கொல்லாமல் விடுதலை செய்து விட்டான். தமது தலைபோவது உறுதியென்று நம்பியிருந்த வீரசேனாசாரியார் விடுதலை செய்யப்பட்டபோது மறுபிறப்புப் பிறந்தவர் போலானார். அவர் நேரே மைசூரிலுள்ள சிரவணபௌகொள என்னும் இடத்தில் உள்ள சமண மடத்திற்குச் சென்று அங்குச் சமண சமய நூல்களை நன்கு ஓதினார்.

செஞ்சி அரசன் அந்நாட்டுச் சமணர் தலையை வெட்டிய காலத்தில், வேறு நாடுகளுக்குத் தப்பிப் போய்விட்ட சமணர்களில் காங்கேய உடையார் என்பவர் ஒருவர். இவர் திண்டிவனத்துக்கடுத்த தாயனூர் என்னும் ஊரைச் சேர்ந்தவர். இவர் உடையார்பாளையம் குறுநில மன்னரிடம் அடைக்கலம் புகுந்தார். குறுநில மன்னர் இவருக்கு நிலபுலன்கள் அளித்து ஆதரித்தார். உடையார் பாளையத்தில் தங்கியிருந்த காங்கேய உடையார், சிலகாலங் கழித்து மைசூரில் உள்ள சிரவண பௌகொள மடத்துக்குச் சென்று அங்கிருந்த வீரசேனாசாரியாரை அ¬ழத்துக் கொண்டு செஞ்சிக்கு வந்து அங்கு மதம் மாறியிருந்த பழைய சமணர்களை மீண்டும் சமண மதத்தில் சேர்ப்பித்தார். வீரசேனாசாரியார், சமண முறைப்படி அவர்களுக்குப் பூணூல் அணிவித்துத் தீக்கை கொடுத்துச் சமணர் ஆக்கினார்.

காங்கேய உடையார் பரம்பரையினர் இன்றும் தாயனூரில் இருக்கின்றனர். செஞ்சிப் பகுதியில் மறைந்து போன சமண மதத்தை மீண்டும் புதுப்பித்தவரின் பரம்பரையினராகையால், இவர்களுக்கு இங்குள்ள சமணர், திருமணம் முதலிய காலங்களில் முதல் மரியாதை செய்து வருகின்றனர்.

இவ்வாறெல்லாம் சமணர் பற்பல காலத்தில் பற்பல துன்பங்களை அடைந்தார்கள். ஆனால், பௌத்த மதம் தமிழ் நாட்டில் அடியோடு அழிந்து விட்டதுபோலச் சமண மதம் முழுவதும் மறைந்து விடவில்லை. சமணர் தமிழ் நாட்டில் இன்றும் சிறு தொகையினராக இருந்து வருகிறார்கள்.

சமயப்போர் கடுமையாக நடந்த காலத்திலும் சமணசமயம் குன்றிய காலத்திலும் சமணரிற் பெரும்பாலோர் ‘‘இந்து’’ மதத்தில் சேர்ந்து சைவராகவும் வைணவராகவும் மதம் மாறிவிட்டனர். இவ்வாறு இந்து மதத்தில் புகுந்த சமணர் வாளா வெறுங்கையோடு வந்துவிடவில்லை. சைவ வைணவராக மாறிய சமணர் தம் சமண சமய ஒழுக்கங்களையும் கொள்கைகளையும் இந்து மதத்தில் புகுத்தி விட்டார். ஏற்கெனவே, திராவிட வைதீக மதங்களின் கொள்கைகள் கலக்கப் பெற்றுப் புதிய உருவடைந்த இந்து மதத்தில் இன்னும் புதியதாகச் சமணக் கொள்கைகளும் கலக்கத் தொடங்கின. இதனோடு நின்றபாடில்லை. இக்காலத்திலேயே தமிழ்நாட்டிலிருந்த பௌத்த மதத்தினரும் இந்து மதத்தோடு சேரத் தொடங்கி அவர்களும் தம் சமயக் கொள்கைகளிற் சிலவற்றைப் புதிய இந்து சமயத்துடன் சேர்த்து விட்டார்கள்.23 இவ்வாறு, இந்து மதத்தில் புதிய புதிய கொள்கைகள் கலக்கப்பெற்று இந்துமதம் பலவாறு மாறுதல் அடைந்து கொண்டிருந்தது. சமணர் சைவ வைணவராகி இந்து மதத்தில் புகுத்திய சமணசமயக் கொள்கைகளை ‘இந்து மதத்தில் சமண சமயக் கொள்கைகள்’ என்னும் அதிகாரத்தில் காண்க.

இன்றும், தமிழ்நாட்டின் சில இடங்களில் ‘நீறுபூசும் வேளாளர்’ என்போர் உள்ளனர். இவரும் முன்பு சமணராக இருந்து பின்னர்ச் சைவராக மாறியவர். இவர் நீறணிந்து சிவனை வழிபடுகின்றனராயினும் இரவில் உண்ணாதிருத்தல் முதலிய சமணசமய ஒழுக்கங் களையும் ஒழுகி வருகின்றனர். இராமநாதபுரம் மாவட்டத்தில் ‘மஞ்சுபுத்தூர் செட்டிகள்’ என்று ஒரு வகுப்பார் உளர். இவர்கள் இப்போது சைவர்கள். ஆனால், வெள்ளிக்கிழமை தோறும், இளையான்குடி சிவன் கோவிலுக்கு வெளியேயுள்ள ‘அமணசாமி’யைத் தொழுது வருகின்றனர். இந்த அமணசாமி இவர்களின் குல தெய்வம் என்றும் சொல்லுகின்றனர். இப்போது சைவராக உள்ளவர்களில் பெரும் பகுதியோர் பண்டைக் காலத்தில் சமணராக இருந்தவர்களே என்பதற்குப் போதிய சான்றுகள் பல உள.

_____________________________________________________________________________

21. திருத்தொண்டர் புராணம் - தண்டியடிகள் புராணம்.

22. திருத்தொண்டர் புராணம் - தண்டியடிகள், 27.

23. இச்செய்தியை இந்நூலாசிரியர் எழுதியுள்ள ‘பௌத்தமும் தமிழும்’ என்னும் நூலிற் காண்க.