பக்கம் எண் :

பக்கம் எண் :9

7.       சமயப்போர்

     பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே, ஆருகத மதம் தமிழ்நாட்டில் கால்கொண்டு செல்வாக்குப் பெற்றிருந்தது என்று கூறினோம். இதனால், வேறு மதங்கள் அக்காலத்தில் இல்லை என்று கூறியதாகக் கருதவேண்டா. அக்காலத்தில் வேறு சில மதங்களும் இருந்தன. அவை, ‘வைதீக மதம்’ எனப்படும் பிராமணீய மதமும், ‘தேரவாதம்’ எனப்படும் பௌத்த மதமும், மற்கலியுண்டாக்கிய ஆசீவக மதமும் ஆகும். சமண மதத்தைப் போன்றே இவையும் வடநாட்டில் தோன்றிப் பின்னர், தென்னாட்டிற்கு வந்தவை. இம்மதங்களை யன்றித் தமிழரின் மதம் ஒன்று தனியாக இருந்தது. இந்தத் தமிழர் மதத்தைத் ‘திராவிட மதம்’ என்னும் பெயரால் குறிப்போம். இத் திராவிட மதத்தைப் பற்றிப் பின்னர், உரிய இடத்தில் விளக்கிக் கூறுவோம்.

     மேற்சொன்ன ‘ஆருகதம்,’ ‘வைதீகம்’, ‘பௌத்தம்’, ‘ஆசீவகம்’ ஆகிய நான்கு வடநாட்டு மதங்களும் அடிநாள் தொடங்கி ஒன்றோடொன்று பகைத்துப் போரிட்டு ஒன்றையொன்று அழிக்க முயற்சி செய்துவந்தன. இந்தச் சமயப்போர் தமிழ்நாட்டிலும் பண்டைக் காலந்தொட்டு நடந்துவந்தது. ஆகையால், இந்த மதப் போராட்டத்தைப் பற்றிய வரலாற்றினை ஆராயவேண்டுவது நமக்குக் கடமையாகின்றது. இதனைச் சுருக்கமாக ஆராய்வாம்.

     தென்னாட்டில் நடைபெற்ற வடநாட்டுச் சமயப் போரில் ஆசீவகமதம் முதன்முதல் ஆற்றல் குன்றி அழிந்துவிட்டது.17 ஆகையால், வைதீகம், பௌத்தம், ஆருகதம் என்னும் மூன்று மதங்கள் மட்டும் நெடுங்காலம் வரையில் போரிட்டுப் பூசல் விளைத்துவந்தன.

    ‘‘ஒட்டிய சமயத் துறுபொருள் வாதிகள்
    பட்டி மண்டபத்துப் பாங்கறிந் தேறுமின்
    பற்றா மாக்கள் தம்முட னாயினும்
    செற்றமுங் கலாமும் செய்யா தகலுமின்’’
                            (மணிமேகலை, 1 - காதை 60-63)

என்று அரசன் ஆணையிருந்தும் சமயப்போர் நின்ற பாடில்லை. மூன்று சமயங்களும் ஒன்றற்கொன்று தீராப் பகைமை கொண்டிருந்த செய்தி தமிழ் நூல்களில் ஆங்காங்கே காணப்படுகின்றன. எடுத்துக்காட்டாகச் சிலவற்றைக் கூறுவோம். பௌத்த மதத்திற்கும் வைதீக மதத்திற்கும் இருந்த பகைமை மணிமேகலை என்னும் பழைய நூலில் ஆபுத்திரன் கதையில் கூறப்பட்டுள்ளது.

     சோழநாட்டுப் பார்ப்பனர் ஒருவர் அனாதைச் சிறுவனாகிய ஆபுத்திரனை வளர்த்துவருகிற காலத்தில், அவ்வூர்ப் பார்ப்பனர் கொலை வேள்வியாகிய யாகம் செய்யத் தொடங்கி அதன் பொருட்டுப் பசு ஒன்றைக் கொண்டு வந்து கட்டிவைத்தனர். பௌத்த தர்மத்தைக் கேட்டுப் பழகிய ஆபுத்திரன் ஆநியாயமாக ஒரு பசு கொல்லப்படுவதைத் தடுக்க எண்ணி ஒருவரும் அறியாமல் அப்பசுவை அவிழ்த்து அதைக் காட்டிற்கு ஓட்டிவிட்டான். பிறகு, உண்மையறிந்த பார்ப்பனர் இவனை ஒறுத்தனர். வளர்ப்புத் தந்தையும் இவனைத் துரத்தி விட்டான். ஆபுத்திரன் பிச்சையேற்று உண்ண நேரிட்டது. அவன் வீதியில் பிச்சைக்குச் சென்றபோது பார்ப்பனர் அனைவரும் அவனது பிச்சைப் பாத்திரத்தில் கல்லையும் மண்ணையும் கொட்டிக் கொடுமைப்படுத்தினார்கள். பிறகு, அவன் இப்பார்ப்பனச் சேரியை விட்டுப் போய்விட்டான்.18 இதனால் பௌத்தரிடம் வைதீகப் பார்ப்பனருக்கு இருந்த சமயப் பகையின் காழ்ப்பு வெளியாகிறது.

     கௌசிகன் என்னும் வைதீகப் பார்ப்பனன் காவிரிப் பூம்பட்டினத்தில் இருந்தபோது, ஒரு பசு தன் கூரிய கொம்புகளால் அவன் வயிற்றைக் குத்திக் கிழித்து விட்டது. அப் பார்ப்பனன் அருகிலிருந்த ஆருகதப் பள்ளியிற் சென்று உதவி வேண்டினான். ஆருகதர் கொலையையும் கொலை செய்வோரையும் கொலை வேள்வியையும் வெறுத்தவராகலின், கொலை வேள்வி செய்பவனும் அதுசெய்ய உடன்படுபவனுமாகிய இவ் வைதீகப் பார்ப்பனனுக்கு உதவிசெய்ய உடன்படாமல் அவனைத் தங்கள் பள்ளியினின்று வெளியே அனுப்பிவிட்டனர்.19 இதனால், வைதீகப் பார்ப்பனருக்கும் ஆருகதருக்கும் இருந்த சமயப் பகைமை விளங்குகின்றது.

     இனி, பௌத்தருக்கும் சமணருக்கும் இருந்த சமயப் பகை எல்லோரும் அறிந்ததே. சமண சமயத்தைக் கண்டிக்கக் குண்டலகேசி என்னும் நூலைப் பௌத்தர் இயற்றியதும், பௌத்த சமயத்தைக் கண்டிக்க நீலகேசி என்னும் நூலைச் சமணர் இயற்றியதும், இந்நூல்களுள் ஒருவர் சமயத்தை யொருவர் கடுமையாகத் தாக்கிக் கூறும் செய்திகளும் இவ்விரு சமயத்தாருக்கும் இருந்த சமயப் பகையைத் தௌ¤வாக்குகின்றன.

     இவ்வாறு, பல நூற்றாண்டுகளுக்கு முன்னர், வைதீகம், பௌத்தம், சமணம் என்னும் மும்மதங்களுக்குள் தமிழ்நாட்டிலே நடைபெற்ற போராட்டத்தில் வைதீக மதம் பின்னடைந்து அழிந்துபோகும் நிலைமை எய்திற்று. வைதீக மதம் பின்னடைவதற்குக் காரணங்கள் இவையாகும்:- வைதீகர் கொலை வேள்வியைச் செய்துவந்தது முதலாவது காரணம். பிராமணர் பிறப்பினால் உயர்வு தாழ்வு பாராட்டியதும், தங்கள் வேதத்தைத் தாங்கள் மட்டுமன்றி மற்றவர் படிக்கக்கூடாது என்று தடுத்துவந்ததும் மற்றொரு காரணம். அன்றியும், ‘‘சுவர்ணதானமே, «க்ஷத்திர (நிலம்) தானமே, கோதானமே, மகிஷ தானமே, அஸ்வதானமே, கஜதானமே, பார்யாதானமே கன்னியா தானமே’’ என்றிவை முதலான தானங்களைப் பெறுவதில் வைதீகப் பார்ப்பனர் கண்ணுங் கருத்துமாக இருந்தனர். பௌத்தரும் சமணரும் பொதுமக்களுக்குச் சாஸ்திரதானம், கல்விதானம், மருந்து முதலியவைகளைக் கொடுத்து உதவியதுபோல வைதீகப் பார்ப்பனர் செய்யவில்லை மற்றும், இக் காலத்திலும் வடநாட்டுப் பார்ப்பனர் மச்சம் மாமிசம் முதலிய ஊனுணவுகளை உண்பது போன்று அக் காலத்தில் தமிழ்நாட்டிலிருந்த பார்ப்பனரும் ஊனுணவை உண்டுவந்தனர். இக்காரணங்களால், தமிழ் மக்களிடையே வைதீகப் பார்ப்பன மதம், பௌத்த சமண மதங்களைப்போன்று செல்வாக்குப் பெறாமல் குன்றத் தொடங்கிவிட்டது. பொதுமக்களின் ஆதரவுபெறாதபடியால் இந்த மதம் பௌத்த சமண மதங்களுடன் போராட்ட வலிமை இல்லாமல் தோல்வியுற்றது. அங்கொருவர் இங்கொருவராகச் சில அரசர் மட்டும் வைதீக முறைப்படி யாகங்கள் செய்ததாகச் சங்க நூல்களில் காணப்படுகின்றன. ஆனால், வைதீக மதம் பொது மக்களால் போற்றப் பட்டதாகச் சான்றுகள் அந்நூல்களில் காணப்படவில்லை.

     வைதீக மதம் செல்வாக்கில்லாமல் பின்னடைந்து போக, பௌத்தமும் சமணமும் செல்வாக்குப் பெற்றுச் சிறந்திருந்தன. இவை செல்வாக்குப் பெற்றதற்குக் காரணங்கள் இவையாகும். இவ்விரு சமயத் தலைவர்கள். வைதீக மதத்தவர்களைப் போன்று இல்லறத்தில் இல்லாமல் துறவிகளாக இருந்தனர். பிராமணர்களைப்போன்று கோதானம் பூதானம் சுவர்ணதானம் முதலிய தானங்களைப் பெறாமல் உணவுதானத்தைமட்டும் சிறிதளவு  பெற்றுவந்தார்கள். தங்கள் மதக் கொள்கைகளை மறைக்காமல் சாதிபேதமின்றி எல்லோருக்கும் போதித்து வந்தார்கள். தங்கள் பள்ளிகளில் நாட்டுச் சிறுவர்களுக்குக் கல்வி கற்பித்துக் கொடுத்தனர். நோயாளிகளுக்கு இலவசமாக மருந்துகொடுத்து நோய் தீர்த்தனர். இவர்கள் பிறப்பினால் உயர்வு தாழ்வு பாராட்டவில்லை. கொலையையும், புலாலுண்பதையும் இவர்கள் முழுவதும் நீக்கியிருந்தார்கள். இவ்வித விரிந்த தாராளமான மனப்பான்மையும் கொள்கையும் உடைய பௌத்த சமண மதங்கள் நாட்டில் செல்வாக்குப் பெற்றுச் சிறப்படைந்திருந்தன.  

     ஆனால், இந்த இரண்டு மதங்களும் ஒற்றுமையாக இருக்கவில்லை. பௌத்தமும், சமணமும் வன்மையாகப் போரிட்டு வந்தன. சிலகாலத்திற்குள் பௌத்த மதத்தின் செல்வாக்குக் குன்றிவிட்டது. பௌத்த மதத்தில் சில பிரிவுகள் ஏற்பட்டுப் பிளவுபட்டு வலிமை குன்றிக் கடைசியில் செல்வாக்கிழந்துவிட்டது. (கி.பி. 8 ஆம் நூற்றாண்டில் கி.பி. 753 இல்) சமண சமய குருவான பேர்பெற்ற ஆசாரிய அகளங்கர்20 காஞ்சீபுரத்தில் பௌத்தக் கோவிலாக இருந்த காமாட்சி அம்மன் ஆலயத்தில் பௌத்தபிக்குகளுடன் சமயவாதம் செய்து அவர்களை வென்றார். தோல்வியுற்ற பிக்குகள் இலங்கைக்குச் சென்றுவிட்டனர். இவ்வாறு, பல நூற்றாண்டுகளுக்கு முன்னர், தமிழ் நாட்டிலே வைதீகம் பௌத்தம் என்னும் மதங்கள் பின்னடைந்துவிடச் சமண மதம் செல்வாக்குப் பெற்றுச் சிறப்புற்றிருந்தது.

     செல்வாக்குப் பெற்றிருந்த சமணசமயம் நெடுங்காலம் சிறப்புடனிருக்க முடியவில்லை. சிலகாலஞ் சென்ற பின்னர்ச் சமணசமயத்தின் செல்வாக்குக் குறையத் தொடங்கிற்று. இதற்குக் காரணம் யாதெனின், புதிதாகத் தோன்றிய ‘இந்து’ மதமும் ‘பக்தி’ இயக்கமுந்தான். இப்புதிய ‘இந்து’ மதம் எவ்வாறு தோன்றியது என்பதை ஆராய்வாம்.

     பண்டைக் காலத்திலே, வடநாட்டினின்று சமணம், பௌத்தம், வைதீகம் முதலிய மதங்கள் தமிழ்நாட்டிற்கு வருவதற்கு முன்னரே, தமிழர் ‘திராவிட’ மதத்தைக் கொண்டிருந்தனர் என்று முன்னர்க் கூறினோம் அன்றோ? அந்தத் திராவிட மதம் என்பது முருகன், கொற்றவை, சிவன், திருமால் முதலிய தெய்வங்களை வணங்கும் வழிபாடு ஆகும். அக்காலத்து வைதீகப் பிராமணர் தம் வேள்விகளில் ஆடுமாடுகளைக் கொன்றுவந்தது போலவே, அந்தக் காலத்துத் தமிழரும் முருகன், கொற்றவை முதலிய தெய்வங்களுக்கு ஆடு கோழிகளைப் பலியிட்டு வணங்கிவந்தனர். உயிர்ப்பலியிடுவதைப் பொறுத்தவரையில் திராவிட மதமும் வைதீக மதமும் ஒற்றுமைகொண்டிருந்தன. ஆனால், அப் பண்டைக் தமிழர் சேயோன் மாயோன் ஆகிய சிவன் திருமால் என்னும் தெய்வங்களுக்கு உயிர்ப்பலி கொடுத்ததாகத் தெரியவில்லை. அன்றியும் அக்காலத்தில் சைவம் என்றும் வைணவம் என்றும் தனித்தனியே இரண்டு மதங்கள் பிரிவுபடவும் இல்லை.

     குறுகிய நோக்கமும் குறுகிய கொள்கையும் உடைய வடநாட்டு வைதீக மதம் தென்னாட்டில் செல்வாக்கின்றி ஒதுக்கப்பட்டிருந்த தென்று முன்னர்க் குறிப்பிட்டோமன்றோ? ஒதுக்கப்பட்டுக் கிடந்த இந்த மதம் பௌத்த சமண மதங்களைப்போன்று செல்வாக்குப்பெற முயன்றது. செல்வாக்குப் பெறவேண்டுமானால் இவ்விரண்டு மதங்களையும் அடக்கி ஒடுக்கவேண்டும். இம்மதங்களை அடக்கி ஒடுக்க வைதீக மதத்திற்கு ஆற்றலும் ஆண்மையும்  இல்லை. ஆற்றலும் ஆண்மையும் பெற வழி யாது? ஒரே ஒரு வழிதான் உண்டு. அவ்வழி யாது எனின்: தமிழர் வழிபட்டு வரும் திராவிட மதத்துடன் வைதீக மதமும் கலந்து கொண்டு பொதுமக்களின் ஆதரவைப் பெறுவதுதான். இதைச் செய்ய வைதீக மதம் முற்பட்டது. நீரில் மூழ்கி உயிர் இழக்குந் தறுவாயிலிருக்கும் ஒருவனுக்கு ஏதேனும் பற்றுக்கோடு கிடைக்குமாயின் அதனை அவன் எவ்வாறு இறுகப் பற்றிக்கொள்வானோ, அவ்வாறே அழியுந் தறுவாயிலிருந்த வைதீக மதம் திராவிட மதத்தைத் தழுவிப் பிடித்துக்கொண்டது. அஃதாவது வைதீக மதம், திராவிட மதத்தின் தெய்வங்களாகிய முருகன், கொற்றவை, சிவன், திருமால் முதலிய தெய்வங்களை ஏற்றுக் கொண்டது.

     ஏற்றுக்கொண்டதோடு நில்லாமல், திராவிட வைதீகத் தொடர்பை உறுதிப்படுத்திக்கொள்ளும் பொருட்டு, திராவிடத் தெய்வங்களுக்கும் வைதீகத் தெய்வங்களுக்கும் புதிய தொடர்புகளையும் உறவுகளையும் கற்பித்துக் கொண்டது. தமிழ் முருகனுக்குச் சுப்பிரமணியன், கந்தன் முதலான புதுப்பெயர்களைச் சூட்டி, வள்ளி என்னும் ஒரு தமிழ் மனைவியோடிருந்த அத் தெய்வத்திற்குத் தெய்வயானை என்னும் ஆரிய வைதீகப் பெண்ணொருத்தியை இரண்டாம் மனைவியாகக் கொடுத்து ஆரியத் திராவிடத் தொடர்பை உறுதிப்படுத்திக்கொண்டது. சிவன் என்னும் திராவிடத் தெய்வம் உருத்திரன் என்னும் வைதீகத் தெய்வத்துடன் பொருத்தப்பெற்று இரண்டும் ஒன்றே என்று கற்பிக்கப்பட்டது. ‘சிசன தேவர்’ என்று வைதிகப் பார்ப்பனரால் ஆதிகாலத்தில் இழித்துரைக்கப்பட்ட சிவலிங்க உருவம், திராவிட வைதீக உறவின் பிறகு உயர்ந்த தெய்வமாக வைதீக மதத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. கொற்றவையைச் சிவனுடைய மனைவியாக்கிவிட்டனர். (ஆனால், மலையாள நாட்டில் கொற்றவையை (காளியை)ச் சிவனுடைய மனைவியாக்க உடன்படாமல், இன்னும் சிவனுடைய தங்கையாகவே கருதிவருகின்றனர்!) கொற்றவை, காளி, துர்க்கை இவர்களெல்லாம் பார்வதியின் வெவ்வேறு அம்சங்கள் என்று கற்பிக்கப்பட்டன. பார்வதிக்கும் சிவனுக்கும் ஆறுமுகன் மகனாகப் பிறந்தான் என்றும், மற்றும் பல கதைகளும் கற்பிக்கப்பட்டன. மாயோனாகிய திருமால் என்னும் திராவிட தெய்வத்துடன் வைதீக தெய்வங்களாகிய விஷ்ணு சூரியன் இவைகள் பொருத்தப் பெற்றுப் புதிய தொடர்புகளும் கதைகளும் கற்பிக்கப்பட்டன. இந்திரன், சந்திரன், பலதேவன், சூரியன் முதலிய சில தெய்வங்கள் மறைக்கப்பட்டு மறக்கப்பட்டன. விநாயகர் (பிள்ளையார்) முதலிய புதிய தெய்வங்கள் புதிதாகப் கற்பிக்கப்பட்டன. இவைகளுக்கு ஏற்ற முறையில் புதிது புதிதாகப் புராணங்கள் கற்பித்து எழுதப்பட்டன. இவ்வாறெல்லாம் திராவிட மதமும் வைதீகமதமும் ஒன்றோடொன்று கலக்கப்பெற்று வைதீகமும் அல்லாததாய் திராவிடமும் அல்லாததாய் இரண்டும் கலந்ததொரு புதிய மதமாக மாறிற்று. இவ்வாறு புதிதாகத் தோன்றிய மதம்தான் ‘இந்து’ மதம் என்பது. இப்புதிய ‘இந்து’ மதம் திடீரென்று உண்டாகவில்லை. இந்தத் தொடர்புகளும் கலப்புகளும் மாறுதல்களும் ஏற்படச் சில நூற்றாண்டுகள் சென்றிருக்க வேண்டும்.

     இவ்வாறு புதிய உருவம் அடைந்த ‘இந்து’ மதத்திற்கு நாட்டிலே சிறிது செல்வாக்கு ஏற்படத் தொடங்கியது. ஏனென்றால், பெருந்தொகையினரான திராவிடக் கொள்கையுடைய தமிழரும் சிறு தொகையினரான வைதீகக் கொள்கையுடைய பிராமணரும் இந்தப் புதிய இந்து மதத்தில் சேர்ந்திருந்தனர். ஆயினும் புதிய ‘இந்து’ மதம் அதிகச் செல்வாக்குப் பெறவில்லை. பின்னர், ‘இந்து’ மதத்தில் பக்தி இயக்கம் தோன்றியது. இந்தப் பக்தி இயக்கந்தான் ‘இந்து’ மதத்திற்குப் புத்துயிரையும் புதிய ஆற்றலையும் பெருஞ் செல்வாக்கையும் தந்தது.  

     ‘பக்தி’ இயக்கத்தை ஆதரவாகக் கொண்டு ‘இந்து’ மதத்தை நிலைநாட்ட நாயன்மார்களும் ஆழ்வார்களும் தோன்றினார்கள். இவர்கள் புதிய ‘இந்து’ மதத்தை ஆதரித்துப் பக்தி இயக்கத்தைப் பரவச்செய்தார்கள். சிவன், அறம் பொருள் இன்பம் வீடு என்னும் நாற்பொருளையும் அருளிச் செய்தார் என்றும், அவரே இருக்கு யசுர் சாமம் அதர்வணம் என்னும் நான்மறையையும் அருளிச் செய்தார் என்றும், அவரே நான்மறையின் பொருளாயிருக்கிறார் என்றும், அவ்வாறே திருமால், நான்கு அறங்களையும் நான்கு மறைகளையும் அருளிச்செய்தார் என்றும், அவரே நான்மறையின் பொருளாயிருக்கிறார் என்றும், நாயன்மார்களும் ஆழ்வார்களும் பாடியிருப்பது, திராவிட - வைதீகக் கொள்கையை ஒன்றோடொன்று பொருத்திப் பிணைத்துப் புதிய இந்து மதத்திற்கு ஆக்கந்தேடுதற் கென்க.

     அவ்வாறே, ‘முத்தமிழும் நான்மறையும் ஆனான் கண்டாய்,’ ‘வடமொழியும் தென்றமிழும் மறைகள் நான்கும் ஆனவன்காண்,’ ‘செந்தமிழோ டாரியனைக் சீரியனை,’ ‘ஆரியன் கண்டாய் தமிழன் கண்டாய், ‘அண்ணாமலையுறையும் அண்ணல் கண்டாய்,’ ‘அந்தமிழின் இன்பப்பாவினை அவ் வடமொழியைப் பற்றற்றார்கள் பயிலரங்கத் தரவணையில் பள்ளிகொள்ளுங் கோவினை’ என்பது முதலாக இவர்கள் கூறியதும் இப்புதிய திராவிட - ஆரிய வைதீக மதக் கலப்பினை வற்புறுத்துவதற்கே.

    இவர்களைப் பின்பற்றியே சேக்கிழாரும் தமது பெரிய புராணத்தில், ‘வேதநெறி தழைத்தோங்க மிகுசைவத் துறைவிளங்க’ என்றும், ‘தாரணிமேற் சைவமுடன் அருமறையின் துறைவிளங்க’ என்றும், ‘சைவமுதல் வைதீகமும் தழைத்தோங்க’ என்றும், ‘அருமறைச் சைவந் தழைப்ப’ என்றும், ‘சைவநெறி வைதிகத்தின் தருமநெறியொடுந் தழைப்ப’ என்றும் ஆங்காங்கே திராவிட வைதீக மதங்கள் இரண்டினையும் இணைத்துக் கூறியுள்ளார்.

     புதிதாகத் தோன்றிய இந்து மதத்திற்குப் புதிய ஆற்றலைக் கொடுத்தது பக்தி இயக்கம் என்று கூறினோம். அதுமட்டும் அன்று, இந்து மதத்திற்குத் துணையாகக் காபாலிகம், காளமுகம், பாசுபதம், மாவிரதம் முதலிய சமயங்கள் தோன்றி வடநாட்டினின்றும் வந்து சேர்ந்தன. இவை இந்து சமயத்தின் உட்பிரிவாகக் கொள்ளப்பட்டு ‘அகச் சமயம்’ என்று பெயர் கொடுக்கப்பட்டன. இந்த மதங்களில் சில நரபலி கொடுக்கும் வழக்கத்தைக் கொண்டிருந்தன. இந்த மதங்களின் உதவியினாலும், ‘பக்தி’ இயக்கத்தின் துணையினாலும் புத்துயிர் பெற்ற இந்து மதம், சமண சமயத்தை வன்மையாகத் தாக்கி அதனை வீழ்த்தத் தொடங்கிற்று.

     ‘இந்து’ மதம் சமண சமயத்தை எவ்வாறு அழித்தது என்பதை அடுத்த அத்தியாயத்தில் ஆராய்வோம்.

_____________________________________________________________________________________________________________

17. ஆசீவக மதத்தின் வரலாற்றினை இந்நூலாசிரியர் எழுதியுள்ள பௌத்தமும் தமிழும் என்னும் நூலில் காண்க.

18. மணிமேகலை: 13 ஆம் காதை.

19. மணிமேகலை, 5 ஆம் காதை, 32-55

20. Ep. Ind. Vol iii, P186, Ep.Rep.1904-05, P.57.