காந்தியின் புனிதப் பொன்உடலில் கயவனின் குண்டு பாய்ந்ததுமே சாந்தம் தவழும் முகத்துடன் சாய்ந்தனர் ‘ஹேராம்’ என்று சொல்லி. கோபுரம் கீழே சாய்ந்ததுபோல் குலுங்கும் பழமரம் வீழ்ந்ததுபோல் பாபுநம் காந்தி புனிதஉடல் பாதகன் செயலால் சாய்ந்ததையோ! தங்க நிலவு மறைந்தது போல் சட்டென இன்னிசை நின்றதுபோல் மங்கல தீபம் அணைந்ததுபோல் மாந்தருள் தெய்வம் மறைந்ததையோ! அறவழி காட்டிய பேரொளியை, அன்பு வடிவாம் மாமணியை, குறளிலே கூறிய பண்பனைத்தும் கொண்டவர் தம்மைக் கொன்று விட்டான்! தெய்வ மகனாய்ப் பிறந்தவரை, தேசப் பிதாவாய்த் திகழ்ந்தவரை, வையகம் போற்றிட வாழ்ந்தவரை வஞ்சகன் சுட்டுக் கொன்றுவிட்டான்! | | |
|
|