பக்கம் எண் :

ஆனந்த வருஷத்து அதிர்ஷ்டக் குழந்தை

27


     ஆனந்த வருஷம் பிறந்தது !  அந்த வருஷத்தில் தான் நம் நாட்டுக்கு முதல்
முதலாகப் புகைவண்டி வந்தது. அதைப் பார்த்தவர்கள், “ஆஹா !  என்ன அதிசயம் ! 
என்ன அதிசயம் ! மாடு இழுக்கவில்லை ;  குதிரை இழுக்கவில்லை ;  மனிதர்கூடப்
பின்னாலிருந்து தள்ளவில்லை ;  புகையை விட்டுக்கொண்டு இவ்வளவு பெரிய வண்டி
தானாக ஓடுகிறதே !” என்று வியப்படைந்தார்கள்.

     சிலர், “சாமியார் சொன்னாரே, அது பலித்துவிட்டது !  இந்த அதிசயத்தைத்தான்
அவர் சொல்லியிருக்கிறார் !”  என்றார்கள்.

     அந்த வருஷத்தில்தான் நம் நாட்டுக்குத் தந்தி வசதியும் வந்தது. “தந்தி வரப்
போவதைத்தான் அதிசயம் என்று சாமியார் சொல்லியிருக்க வேண்டும்” என்று வேறு சிலர்
நினைத்தார்கள்.

     அதே வருஷம், சூரியமூலை என்ற கிராமத்தில் ஓர் ஆண் குழந்தை பிறந்தது.
அந்தக் குழந்தை பிறந்த வருஷமே, அதன் தகப்பனார் அரியலூரில் புதியதாக ஒரு வீடு
கட்டினார். அப்போது அந்தக் குழந்தையினுடைய தாயார் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே
இல்லை. “இந்தக் குழந்தை பிறந்த வருஷமே நமக்குப் புது வீடு கிடைத்திருக்கிறது. இது
அதிர்ஷ்டக் குழந்தைதான் !  இங்கே ஏதோ ஓர் அதிசயம் நடக்கப் போவதாக அந்தச்
சாமியார் சொன்னாரே, அவர் என் குழந்தையை நினைத்துத் தான் சொல்லியிருக்க
வேண்டும்” என்று அடிக்கடி பெருமையோடு சொல்லுவார்கள்.