பக்கம் எண் :

28

பெரியோர் வாழ்விலே


      அந்தக் குழந்தையின் பிறப்பைத்தான் அதிசயம் என்று நினைத்து அந்தச் சாமியார்
சொன்னாரோ இல்லையோ, அது நமக்குத் தெரியாது. ஆனால், அந்தக் குழந்தை
பிறந்ததால், அந்தக் குழந்தை பிறந்த குடும்பத்துக்கு நல்ல அதிர்ஷ்டம் பிறந்தது. அத்துடன்
அந்தக் குழந்தை பிறந்த தமிழ்நாட்டுக்கே ஒரு பெரிய அதிர்ஷ்டம் ஏற்பட்டது !  ஆமாம்.
அந்தக் குழந்தை பிறந்திராது போனால், பல அருமையான தமிழ் நூல்கள் நமக்குக்
கிடைக்காமலே போயிருக்கும் ! 

     இப்போது ஆண்டுதோறும் ஏராளமாக அச்சுப் புத்தகங்கள் வெளிவருகின்றன.
ஆனால், அந்தக் காலத்தில் அச்சுப் புத்தகம் ஏது? ஓலையில்தான் பலர் எழுதி வைத்துக்
கொண்டு படித்து வந்தார்கள். அந்த ஓலைச் சுவடிகள் எல்லாம் சரியாகப் பாதுகாக்கப்
படாமல், மூலை முடுக்குகளில் கிடந்தன. கறையான் அரித்து உருத்தெரியாமல் போய்க்
கொண்டிருந்தன. அந்த ஓலைச் சுவடிகளையெல்லாம் தேடி அலைந்து சேகரித்து வந்து, நல்ல
முறையிலே புத்தகமாக வெளியிடுவது சுலபமான காரியமா? அந்தக் காரியத்தை
எவ்வளவோ பாடுபட்டு மிகவும் அழகாகச் செய்து முடித்தது சூரியமூலையில், ஆனந்த
வருஷத்தில் பிறந்த அந்தக் குழந்தைதான் ! 

     மகாமகோபாத்தியாய தாக்ஷிணாத்ய கலாநிதி, திராவிட வித்யா பூஷணம்,
மகாவித்துவான், டாக்டர் உ.வே.சாமிநாதய்யர் என்ற பெயரைக் கேள்விப்
பட்டிருக்கிறீர்களா? இவ்வளவு நீளப் பெயரை நீங்கள் கேள்விப்படிராது போனாலும்,
‘தமிழ்த் தாத்தா’ என்ற