ஆனந்த வருஷத்து அதிர்ஷ்டக் குழந்தை | 33 | துன்பப்படுவார். ஆனால், அதை அவர் வெளியில் காட்டிக் கொள்ளவே மாட்டார்.
ஒருநாள் காலை நேரம். எண்ணெய் தேய்த்துக் கொள்வதற்காக மீனாட்சிசுந்தரம் பிள்ளை ஒரு பலகையைப் போட்டு அதன் மேல் உட்கார்ந்திருந்தார். எண்ணெய் தேய்த்துக் கொள்ளும்போதுகூட மாணவர்களுக்குப் பாடம் சொல்லிக் கொடுப்பது அவரது வழக்கம். அன்றும் வழக்கம்போல் அவர் எதிரில் சாமாவும் மற்ற மாணவர்களும் உட்கார்ந்திருந்தார்கள்.
மீனாட்சிசுந்தரம் பிள்ளை, தாமாக எண்ணெய் தேய்த்துக்கொள்ள மாட்டார். ஒரு வேலைக்காரன் தான் வழக்கமாக அவருக்கு எண்ணெய் தேய்த்து விடுவான். அன்று அந்த வேலைக்காரன் எண்ணெய் எடுத்து வருவதற்காகச் சமையல் அறைக்குள் சென்றான். ஆனால், வெகு நேரமாகியும் அவன் திரும்பி வரவில்லை. மீனாட்சிசுந்தரம் பிள்ளை, பாடம் சொல்லிக் கொடுக்கும் மும்முரத்தில் எண்ணெயைப் பற்றி மறந்தே போய்விட்டார்.
ஆனால் சாமா அதை மறக்கவில்லை. ‘என்ன இது ! வேலைக்காரன் உள்ளே போய் எவ்வளவு நேரமாகிறது ! ஏன் தாமதம்?’ என்று நினைத்து மெதுவாக எழுந்தார். சமையல் அறைக்குள்ளே சென்றார். அங்கே எண்ணெய் ஒரு சொட்டுக்கூட இல்லை என்பதை அறிந்தார். உடனே ஒருவரிடமும் சொல்லாமல், வீட்டைவிட்டு வெளியே வந்தார். தலை தெறிக்க வேகமாக ஓடினார். எங்கே? கடைவீதியை நோக்கி, எதற்காக? எண்ணெய் வாங்கி வருவதற்காகத்தான் ! |
|
|
|
|