பதினான்கு வயதில் பத்திரிகாசிரியர் | 45 | அப்போது, நாதிர்கான் என்று ஒரு கவிஞர் இருந்தார். ஆஸாத் அற்புதமாகக் கவி இயற்றுகிறார் என்பதைக் கேட்டதும் அவர் நம்பவே இல்லை. ‘இந்தப் பையனாவது ; கவி இயற்றுவதாவது ! யாரோ ஒரு பெரியவர் கவிதைகளை எழுதி இவனிடம் கொடுத்திருக்கிறார். இவன் அவற்றைத் தான் எழுதியதாகக் கூறித் தம்பட்டம் அடிக்கிறான்’ என்றே நினைத்தார்.
ஒருநாள், ஆஸாத் ஒரு புத்தகக் கடையில் நின்று, அங்குள்ள புத்தகங்களைப் பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது, அவ்வழியாக வந்தார், நாதிர்கான். அவர் ஆஸாத்தைக் கண்டதும், “என்னப்பா, பாட்டுக்கு மேல் பாட்டாக எழுதிக் குவிக்கிறாயாமே ! அது உண்மைதானா? எங்கே, நான் சொல்லுகிறபடி செய், பார்க்கலாம். நான் ஒரு வரி சொல்கிறேன். அதைக் கடைசி அடியாக வைத்துக்கொண்டு நீ பாட்டு எழுத வேண்டும். உன்னால் முடியுமா?” என்று கேட்டார்.
இதைக் கேட்டதும், ஆஸாத் சிறிதும் தயங்கவில்லை. “சரி, சொல்லுங்கள், கடைசி அடியை” என்றார்.
நாதிர்கான் கடைசி அடியைக் கூறினதும், ஆஸாத் மளமளவென்று மற்ற அடிகளைப் பாட ஆரம்பித்து விட்டார் ! அதைக் கேட்டதும், நாதிர்கான் திகைத்துப் போய்விட்டார். உடனே, சந்தேகம் மறைந்தது ; சந்தோஷம் பிறந்தது. அந்த இடத்திலேயே அவர் ஆனந்தக் கூத்தாட ஆரம்பித்து விட்டார் ! |
|
|
|
|