ஆஸாத் மழைக்குக்கூட ஆங்கிலப் பள்ளிக்கூடத்தில் ஒதுங்கியதில்லை. ஆங்கிலக் கல்வி தேவையில்லை என்றே அவருடைய அப்பா நினைத்தார். அதனால்தான், அவர் ஆங்கிலப் படிப்புக்கு ஏற்பாடு செய்யவில்லை.
ஆனால், அப்பா இறந்த பிறகு, ஆஸாத்திடம் அவருடைய நண்பர் ஒருவர் ஆங்கிலம் கற்கும்படி அடிக்கடி கூறி வந்தார். அதனால் ஆஸாத் அகராதியையும் இலக்கணத்தையும் வைத்துக் கொண்டு ஆங்கிலம் கற்க ஆரம்பித்தார்.
எல்லாவற்றையும் எளிதில் புரிந்துகொள்ளும் ஆஸாத்துக்கு, ஆங்கிலம் கற்பது சிரமமாகத் தோன்றவில்லை. வெகு சுலபமாக அவர் ஆங்கிலத்தைக் கற்றுக் கொண்டுவிட்டார். கற்றுக் கொண்டதோடு, நன்றாக விருத்தியும் செய்து கொண்டார்.
இப்போது அவர் நூல் நிலையத்தில் அநேக ஆங்கிலப் புத்தகங்கள் இருக்கின்றன. ஷேக்ஸ்பியர், பைரன், வேர்ட்ஸ்வொர்த் முதலிய ஆங்கிலக் கவிஞர்களின் புத்தகங்களையெல்லாம் அவர் நன்றாகப் படித்திருக்கிறார். ஆங்கிலத்தில் அவருக்குப் பிடித்தமான கவிஞர் பைரன்தான் !
* * *
தேசத் தொண்டில் ஈடுபட்ட பிறகு ஆஸாத் ‘அல்-ஹிலால்’ என்ற ஒரு பத்திரிகையை நடத்தி வந்தார். அதில் மிகவும் தீவிரமாக எழுதி வந்தார். அந்தப் பத்திரிகையைப் படித்து அநேகர் தேசீய உணர்ச்சி பெற்றனர் ; தேசத் தொண்டில் ஈடுபட்டனர். |