அந்தப் பத்திரிகையில் மிகவும் அருமையான கட்டுரைகளை ஆஸாத் எழுதி வந்தார்.
அதைப் படித்தவர்களெல்லாம், அதைப் பத்திரமாகப் பாதுகாத்து வைத்தார்கள் ; இன்றும் சில வீடுகளில் அந்தப் பத்திரிகையின் பழைய இதழ்கள் இருக்கின்றன.
ஒரு சமயம், சுமார் மூன்று ரூபாய் மதிப்புள்ள பழைய அல்-ஹிலால் பத்திரிகைகள் ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்பட்டன ! இதிலிருந்தே அந்தப் பத்திரிகைக்கு இருந்த மதிப்பை நாம் நன்கு தெரிந்து கொள்ளலாம். * * * அக்காலத்தில் நம்மை ஆண்டுவந்த ஆங்கிலேயரை யாராவது எதிர்த்தால், உடனே ‘ராஜத்துரோகி’ என்று அவர்கள் மீது குற்றம் சாட்டுவார்கள் ; கைது செய்து சிறையிலும் அடைப்பார்கள்.
அதேபோல், ஆஸாத் மீதும் 1922-ஆம் வருஷம் குற்றம் சாட்டப்பட்டது. அவரை மாஜிஸ்ட்ரேட் விசாரணை செய்தார். அப்போது, ஆஸாத் கூறிய வீரமொழிகளைக் கேட்டு எல்லோருமே உணர்ச்சி பெற்றனர். அவருடைய தைரியத்தைப் பாராட்டினர்.
அவர் மாஜிஸ்ட்ரேட்டைப் பார்த்துக் கூறியதன் சுருக்கம் இதுதான்:
“என்ன வந்தாலும் நான் சத்தியத்தையே பேசுவேன். சத்தியத்தில்தான் எனக்குப் பூரண நம்பிக்கை உண்டு. முஸ்லிம்களின் தேச சரித்திரத்திலிருந்து ஓர் உதாரணம் கூற விரும்புகிறேன்.” |