பக்கம் எண் :

பதினான்கு வயதில் பத்திரிகாசிரியர்

49


      கல்கத்தாவில் இந்துக்கள் அதிகமாக வசிக்கக் கூடிய ஓர் இடம் இருந்தது. அங்கு,
வெளியூர்களிலிருந்து முஸ்லிம் தையற்காரர்கள் அடிக்கடி வருவார்கள். வந்து, ஏதேனும்
தையல் வேலை இருந்தால், அதைச் செய்து கொடுத்துவிட்டுக் கூலி வாங்கிச் செல்வார்கள்.

     ஒரு சமயம், அவர்கள் அங்கு வந்திருந்தபோது, திடீரென்று இந்து-முஸ்லிம் கலகம்
உண்டாகிவிட்டது. தெருவில் கலகக்காரர்கள் ஒருவரை ஒருவர் குத்திக் கொலை செய்து
கொண்டிருந்தார்கள். ஆனாலும் இந்துக்கள் எல்லோருமே முஸ்லிம்களை
வெறுக்கவில்லை ;  அதேபோல் முஸ்லிம்கள் எல்லோரும் இந்துக்களை வெறுக்கவில்லை.
சில மத வெறியர்கள்தான் அந்தக் கலகத்தை உண்டாக்கினார்கள்.

     முஸ்லிம் தையற்காரர்கள் என்ன செய்வதென்று புரியாமல் திகைத்தனர். அப்போது
அவர்களின் உயிரைப் பாதுகாக்க அந்தப் பகுதியிலிருந்த இந்துக்களே முன் வந்தனர்.
தங்கள் வீடுகளிலே தங்க இடம் கொடுத்தனர்.

     விஷயம் தெரிந்ததும் ஆஸாத் தைரியமாக அந்தக் கலகக்காரர்களைக் கடந்து,
தையற்காரர்கள் தங்கியிருந்த வீடுகளுக்கு வந்தார். அங்கு தங்கியிருந்த முஸ்லிம்களை
லாரிகளில் ஏற்றினார் ;  அவர்கள் உயிரைக் காப்பாற்றிய இந்துக்களுக்கு நன்றி
செலுத்திவிட்டு, தையற்காரர்கள் ஒவ்வொரு வரையும் அவரவர் இடத்தில் கொண்டு போய்ப்
பத்திரமாகச் சேர்த்துவிட்டுத் திரும்பினார்.