பக்கம் எண் :

காற்றாடியால் காயம் பட்டவர்

55


நாட்டு வைத்தியருக்கு நாம் நன்றி சொல்ல வேண்டும் என்று சொன்னேன்.


* * *
 

     திரு.வி.க. பிறந்த ‘துள்ளம்’ என்ற கிராமத்தில், அமீனா முனிசாமிப் பிள்ளை என்ற
ஒருவர் இருந்தார். அவர் மிகவும் பொல்லாதவர். பெரியவர்கள் அவரைப் பார்த்ததும்,
இருந்த இடத்தைவிட்டு எழுந்து நின்று மரியாதை செலுத்துவார்கள். குழந்தைகள் அவர்
பெயரைக் கேட்டாலே நடுநடுங்குவார்கள். ஒருநாள் திரு.வி.க.வும் அவருடைய நண்பர்களும்
தெருவிலே விளையாடிக் கொண்டிருந்தார்கள். அப்போது ‘கலகல, கலகல’ என்ற சலங்கைச்
சத்தம் கேட்டது. உடனே, சிறுவர்கள் ஆட்டத்தை நிறுத்தி விட்டுச் சத்தம் வந்த பக்கம்
திரும்பிப் பார்த்தார்கள். இரட்டை மாட்டுக் கூண்டு வண்டி ஒன்று வந்து கொண்டிருந்தது.

     “டேய், அமீனா முனிசாமி வருகிறார் !”  என்று ஒருவன் கத்தினான். மற்றொருவன்
“ஆமாம், ஆபத்து !  வாருங்கள். ஓடிப் போய் ஒளிந்து கொள்ளலாம்” என்றான்.

     இதற்குள் வண்டி நெருங்கி வந்துவிட்டது. அப்போது திரு.வி.க. நண்பர்களைப்
பார்த்து, “ஏன் இப்படிப் பயந்து ஓடுகிறீர்கள்? அமீனா தலையில் கொம்பு
முளைத்திருக்கிறதா?” என்று கேட்டார்.

     திரு.வி.க. இப்படிக் கேட்டது நண்பர்கள் காதில் விழுந்ததோ இல்லையோ, அமீனா
முனிசாமிப் பிள்ளை காதில் நன்றாக விழுந்துவிட்டது !