| 204 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 9 |
இவர் தமிழில் மொழி பெயர்த்தார்; அனைத்தையும் ஒன்றுசேர்ந்து அச்சிட்டு வெளியிட்டார். இப் பெருமகனார் செய்த மொழித்தொண்டின் பயனா கத்தான், இன்று தமிழார்வம் பூத்துக் குலுங்கி மலர்ந்து மணம் வீசிவருகின்றது. உ. இசைக்குயில் தமிழ்நாட்டில், தமிழ்மக்கள் முன்னிலையில் தமிழர்கள் பாடிவந்த இசையரங்குகளில், தமிழை ஒதுக்கிவிட்டுப் பிறமொழிப் பாடல்களையே அக்காலத்தில் பாடிவந்தார்கள் அத்தகைய நிலையில் தமிழிசைக்கு முதன்மை தரவேண்டும் என்று எண்ணினார் வேதநாயகர். இவர் குறிப்பிட்ட ஒரு சமயத்தைச் சார்ந்தவராக இருந்தாலும், சமயச் சார்பில்லாமல், பொதுவான பாடல்களை இயற்றித் தமிழிசையைப் பரப்பினார். தமிழிசையின் மறுமலர்ச்சிக்குப் புத்துயிர் அளித்த பெருமை இவரைச் சாரும். இசைப்பாடல் இயற்றக் காரணம் வேதநாயகர், திரிசிரபுரத்திலிருந்த மாவட்ட நீதிமன்றத்தில் மொழிபெயர்ப்பாளராகப் பணியாற்றிக் கொண்டிருந்த பொழுது, இசை நிகழ்ச்சிகளுக்குத் தவறாது சென்று கேட்டு மகிழ்வார். அரங்குகளில் பாடிய இசைவாணர் பிறமொழிப் பாடல்களையே பாடிவந்தனர். தமிழ்நாட்டில் விசய நகர மன்னர்கள் ஆட்சியும், நாயக்க மன்னர்கள் ஆட்சியும் பரவியிருந்தமையால், தெலுங்கு மொழி ஆதிக்கம் பெற்றிருந்தது. அதனால் பாடல் இயற்றும் ஆசிரியர்கள் தெலுங்குப் பாடல்களை இயற்றத், தொடங்கினார்கள். இசை வாணரும் அவற்றையே மேடைகளில் பாடிவரலாயினர். இவ்வாறு தென்மாவட்டங்களில் நடைபெற்ற எல்லா இசையரங் குகளிலும் பிறமொழிப் பாடல்களே முழங்கி வந்தன. இசையரங்குகளில் பிறமொழிப் பாடல்களையே கேட்டு வந்த வேநாயகரின் மனம் மிகவருந்தியது. தமிழ்நாட்டில் தமிழ்ப் பாடல் களைக் கேட்க முடியவில்லையே என்று இவர் எண்ணி யெண்ணிப் பலநாள் நொந்து தவித்தார். மேலும், கிர்த்தனை அமைப்பில் பாடல்கள் இயற்றத் தமிழ் மொழி இடந்தராது என்னும் தவறான கருத்தும் அப்பொழுது நாட்டில் உலவியது. இக் கருத்தைக் கேள்விப்பட்ட வேதநாயகர், ‘தமிழுக்கு இப்படி ஒரு பழி வரலாமா’ என்று துடித்தார்; அப் பழியை நீக்க வேண்டும் என்று சிந்தித்தார்; தாமே கீர்த்தனை அமைப்பு களில் தமிழ்ப்பாடல்கள் இயற்றுவ தென முடிவு செய்தார். |